பட்டை, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் சேர்த்த பானத்தை வாரத்தில் 5 நாட்கள் குடித்தால் ஒரு வாரத்திலேயே மூன்று கிலோ உடல் எடையை குறைக்க முடியும் என்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை எளிதில் குறைக்கலாம் என்றும தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையைஅறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது
தகவலின்விவரம் (What is the claim):
பட்டை, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் சேர்த்த பானத்தை வாரத்தில் 5 நாட்கள் குடித்தால் ஒரு வாரத்திலேயே மூன்று கிலோ உடல் எடையை குறைக்க முடியும் என்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை எளிதில் குறைக்கலாம் என்றும் தெரிவித்து குறித்த காணொளி 2026.10.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இஞ்சி, பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் உடல் எடை தொடர்பான தாக்கம் குறித்து சில ஆய்வுகள் உள்ளன. உதாரணமாக, இஞ்சி தொடர்பான meta-analysis-களில் உடல் எடை அல்லது இடுப்பு சுற்றளவில் சிறிய அளவிலான குறைவு காணப்பட்டாலும், ஆய்வுகளின் ஆதாரத் தரம் குறைவாகவோ மிகவும் குறைவாகவோ இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் மஞ்சள் மற்றும் பட்டை குறித்த புள்ளிவிவர ரீதியான ஆய்வுகளிலும் (meta-analysis) உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவில் சிறிய குறைவுகள் பதிவாகியுள்ளன. ஆனால் இவை மேற்குறிப்பிட்ட இந்தப் பானத்தை குடிப்பதால் ஏற்படும் விளைவு என்பதை நிரூபிக்கவில்லை.
மேலும் எலுமிச்சை சாதாரண நீரைச் சுவையாக்குவதால் போதிய நீர் அருந்த உதவலாம். விட்டமின் C சத்தும் சிறிதளவு கிடைக்கும். இது பயனுள்ளதுதான், ஆனால் நச்சு நீக்கம் என்பது முற்றிலும் வேறு விடயம். மேலும், அமிலத்தன்மை மிகுந்த எலுமிச்சை நீரை அடிக்கடி குடித்தால், அமில எதிர்ப்பு (reflux) அல்லது இரைப்பை அழற்சி உள்ளவர்களுக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். நாளடைவில் பற்களின் எனாமலும் பாதிக்கப்படலாம்.
மேலும், இந்தப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் ஒரு பானத்தை வாரத்தில் 5 நாட்கள் குடித்தால் தொப்பைக் கொழுப்பு எளிதில் கரையும் என்பதற்கான நம்பகமான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரோக்கியமான உணவுமுறை, உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் மற்றும் நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றங்களே முக்கியமானவை. CDC அறிக்கையும் படிப்படியாக, வாரத்திற்கு சுமார் 0.45–0.9 கிலோ எடைக் குறைப்பு நீண்டகாலம் பராமரிக்கக்கூடியதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
மேலும், தேநீர் அல்லது கோபியில் சர்க்கரை சேர்த்து குடிப்பதற்குப் பதிலாக சர்க்கரை இல்லாத குறைந்த கலோரி பானத்தைத் தேர்வு செய்வது மொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவலாம். ஆனால் அதுவே இந்த மூலிகைப் பானம் “கொழுப்பைக் கரைக்கும்” என்பதற்கான ஆதாரம் அல்ல.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க
எனவே மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பான உண்மையான தெளிவினை பெற்றுக் கொள்வதற்காக நாம் இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க இவர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது,இந்த மூலிகைகள் அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவை எனவும் அவை ஒவ்வொரு நபரின் உடலிலும் வெவ்வேறு விதமாகவும், உடலின் வெவ்வேறு நிலைகளிலும் செயல்படக்கூடும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டார். மேலும் உண்மையான ஆயுர்வேத அறிவின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தக் கலவையும், இதனால் ஏற்படும் எனக் கூறப்படும் விளைவுகளும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்லது நியாயப்படுத்தக்கூடியவை அல்ல.
மேலும், ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப இந்தக் கலவையைப் பயன்படுத்துவது சில சமயங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, செரிமானப் பாதை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
பட்டை, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் சேர்த்த பானத்தை வாரத்தில் 5 நாட்கள் குடித்தால் ஒரு வாரத்திலேயே மூன்று கிலோ உடல் எடையை குறைக்க முடியும் என்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை எளிதில் குறைக்கலாம் என்றும் பகிரப்படும்தகவலானது தவறானது என்பதுடன், இஞ்சி, மஞ்சள், பட்டை போன்ற பொருட்கள் உடல் எடை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து தயாரிக்கும் பானம் மட்டும் விரைவாக உடல் எடையைக் குறைக்கும் அல்லது தொப்பைக் கொழுப்பை கரைக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை என்பதுடன் இதனால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதுவும் வைத்தியர்களின் கருத்து மற்றும் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



