
பளை காட்டுப் பகுதியில் LTTE முகாமொன்றும் குண்டு தயாரிப்பு நிலையமொன்றும் இருப்பதாகவும், அவ்வாறான ஒன்று தொடர்பில் சந்தேகிக்கக்கூடிய நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. எமக்குக் கிடைத்த வாசகர் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு
தகவலின்விவரம் (What is the claim):

“அண்மையில் ‘கண்டங்களுக்கிடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழு’ (Intercontinental Human Rights Commission) எனப்படும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, பளை வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாமொன்றும் குண்டு தயாரிப்பு நிலையமொன்றும் தொடர்பில் தகவல்களை வெளியிட்டிருந்தார். பளை பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 49 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு, எந்தவொரு அரச நிறுவனத்தின் அல்லது உள்ளூராட்சி நிறுவனத்தின் அனுமதியும் இன்றி மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய கான்கிரீட் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக தினமும் சுமார் 100–150 பேர் வருகை தருவதாகவும், இது வெளிநாட்டுத் திட்டமொன்றாகக் காண்பித்து ஒருங்கிணைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை சிங்கள மக்களும் வனத்துறை அதிகாரிகளும், இந்த இரகசிய நிர்மாணப் பணியின் ஊடாக LTTE பயிற்சி முகாமொன்றையும் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் அமைக்க முயற்சிக்கப்படுவதாக சந்தேகிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக பளை பிரதேச வன அதிகாரிகள் (RFO) ஏற்கனவே ஏழு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போது நிர்மாணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், இந்தத் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.”
Explainer (விளக்கமளித்தல்)
பளை பகுதியில் வனப்பகுதி அழிக்கப்படுவதாகவோ அல்லது LTTE பயிற்சி முகாம் மற்றும் குண்டு தயாரிப்பு நிலையம் என அடையாளம் காணக்கூடிய ஏதேனும் ஒன்று இருப்பதாகவோ பிரதான ஊடகங்கள் அல்லது அதிகாரப்பூர்வமான நம்பகமான வேறு எந்த ஆதாரமும் இதுவரை உறுதிப்படுத்திய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பளை பாதுகாப்பு வனப்பகுதியில் பயங்கரவாத முகாம்கள் இல்லை – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
கிளிநொச்சி, பளை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எந்தவொரு வகையான பயங்கரவாதப் பயிற்சி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இல்லை என பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவ்வாறான பயங்கரவாத முகாமொன்று இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய பரபரப்பான தகவல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த இடத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பல ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டு, பண்ணையொன்றும் ஆடைத் தொழிற்சாலையொன்றும் நடத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளதாக அவர் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மூன்று மாடிக் கட்டிடமொன்றில் ஜூகி தையல் இயந்திரங்களைப் பயன்படுத்தி அந்த ஆடைத் தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்ததாகவும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை நடத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பண்ணையிலும் தொழிற்சாலையிலும் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணப் பணிகள் தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை பயங்கரவாத முகாமாக சித்தரித்து பரபரப்பை ஏற்படுத்த முயன்ற தரப்பினர் தொடர்பிலும் விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
நாங்கள் மேற்கொண்ட விசாரணையின்போது, பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பளை பகுதியில் அவ்வாறான வனப்பகுதி அழிப்பு நடவடிக்கையோ, LTTE பயிற்சி முகாம் மற்றும் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். எனினும், அக்கராயன் எனப்படும் பகுதியில் வனப்பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பான தகவல் கிடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இது தொடர்பாக கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களைத் தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது, ஜூலை மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ள மற்றொரு பகுதியான அக்கராயன் எனப்படும் இடத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து நிலத்தைத் துப்புரவு செய்த சிலர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அந்தச் சம்பவமே பளையில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தனியார் காணியொன்றைச் சுத்தம் செய்வதாகக் கூறி, அதிலிருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டதாகவும், அதேவேளை அந்த இடத்தில் ஏற்கனவே கட்டிடமொன்று இருந்ததாகவும், அங்கு விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்தத் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் காணியைத் துப்புரவு செய்யும் பணிகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினர்கள் சிலரும் ஈடுபட்டிருந்ததாக, நாம் மேற்கொண்ட விசாரணையின்போது பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த இடத்தில் உள்ள கட்டிடத்தில் ஆடைகள் தைக்கும் தொழிற்சாலை ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும், குறித்த காணியில் கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் பண்ணையொன்றும் நடத்தப்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றுவதற்காக பெருமளவானோர் வருகை தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முறைப்பாட்டை முன்வைத்த சங்கீத் ஜயசேகர
இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை முன்வைத்தவர், ‘கண்டங்களுக்கிடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழு’ / ‘ICHRC (Inter-Continental Human Rights Commission)’ எனப்படும் தனியார் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர ஆவார்.
இந்தப் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்கள் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்த சங்கீத் ஜயசேகர, இது தொடர்பான ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக அவரைத் தொடர்புகொண்டு நாம் விசாரித்தோம்.
‘பளை’ எனக் குறிப்பிடப்பட்டாலும், சம்பவம் ‘அக்கராயன்குளம்’ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றது
சங்கீத் ஜயசேகர தெரிவித்ததாவது, ‘பளை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறித்த பகுதி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாகும். ‘பளை’ என்ற பெயர் பொலிஸ் பிரிவை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் இவ்வாறான மூன்று மாடிக் கட்டிடமொன்று இருப்பதாகவும், LTTE அமைப்பை மீளச் செயற்படுத்துவதற்காக குண்டுகள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிக்கும் மையமாக இது உருவாக்கப்பட்டு வருவதாகத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வனப்பகுதியை அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, அண்மையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாகவும், அச்சந்தர்ப்பத்திலும் அங்கு இருந்தவர்கள் குழப்பமான முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வன அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் பதிவுகள், ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதியில் கணிசமான அளவிலான வனப்பகுதி அழிக்கப்பட்டிருப்பதையும், அங்கு மூன்று மாடிக் கட்டிடமொன்று இருப்பதையும் அடையாளம் காண முடிகிறது.
2026.04.06

2026.02.09



கண்டங்களுக்கிடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2026 ஜூலை 31 அன்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
மேலும், கண்டங்களுக்கிடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழு (ICHRC) 2026 ஜூலை 31 அன்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தையும் அவர் எமக்கு அனுப்பி வைத்தார். அதில், அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்குள் அமைந்துள்ள 39 முதல் 45 ஏக்கர் வரையிலான பரப்பளவு கொண்ட காணி பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு பகுதியில் மூன்று மாடிகளைக் கொண்ட கான்கிரீட் கட்டிடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் தமிழீழ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தொடக்கத் தளமாகப் பயன்படுத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளும் ஏனைய அதிகாரிகளும் புரிந்துகொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் தரைத்தளம் ஆடைத் தொழிற்சாலையாக நடத்தப்பட்டு வருவதாகவும், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 முதல் 150 வரையிலான ஆண்களும் பெண்களும் இந்தத் தடைசெய்யப்பட்ட காணியின் சட்டவிரோத உரிமையாளரால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கற்றாழை பயிர்ச்செய்கையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், ஏழு வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வனத்துறை அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் ட்ரோன் கமரா காட்சிகள் மூலம் தெரியவருவது என்னவென்றால், அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 39–45 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், தற்போது சுமார் 10 பேர்ச் அளவிலான சிறிய பகுதியில் மட்டுமே கற்றாழை பயிரிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அறிவுபூர்வமாகவும் ஆழமான விசாரணைக் கோணத்திலும் ஆராயும்போது, இந்த இடம் LTTE அமைப்பை மீளச் செயற்படுத்துவதற்காக குண்டுகள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிக்கும் இரகசிய மையமாக உருவாக்கப்பட்டு வருவது தெளிவாகத் தெரிவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கீழே.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களாக உள்ள ‘B’ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை என்ன?
இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களாக எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ‘B’ அறிக்கைகளை நாம் ஆய்வு செய்தோம். அத்துடன், வன அதிகாரியினால் இந்த வழக்குகள் எதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் நாம் ஆராய்ந்தோம்.
இந்த வழக்குகள், அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், வன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அங்கு அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் முக்கொம்பன் கிராம எல்லைக்கு அருகிலுள்ள கன்னகீபுரம் பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை சட்டவிரோதமாக அழித்து, கான்கிரீட் தூண்கள், தகடுகள் மற்றும் முள்வேலிகளை அமைத்ததுடன், பல கட்டிடங்களை நிர்மாணித்து வந்ததாகவும், கன்னகீபுரம் மேற்குப் பகுதியில் வசிப்பவராக அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு எதிராக ஆரம்பகட்டமாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் B அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வழக்கு அறிக்கையிலோ அல்லது B அறிக்கையிலோ பயங்கரவாத நடவடிக்கைகள், LTTE அமைப்பு அல்லது குண்டுகள்/ஆயுதங்கள் தயாரித்தல் தொடர்பாக எந்தவொரு குறிப்பும் இல்லை. இந்த அனைத்து உத்தியோகபூர்வ நீதிமன்ற அறிக்கைகளும் நேரடியாக இலங்கை வனப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான சட்ட மீறல்கள் தொடர்பானவையாகும்.
அந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
- பாதுகாக்கப்பட்ட வன நிலங்களை சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமித்தல்.
- பாலை மற்றும் வீரா போன்ற பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல், மரக்கட்டைகளை வைத்திருத்தல் மற்றும் வனப்பகுதியை அழித்தல்.
- அனுமதியின்றி கான்கிரீட் தூண்கள், முள்வேலிகள், செங்கல் கட்டிடங்கள் மற்றும் தற்காலிக வீடுகளை அமைத்தல்.
- பேக்கோ (JCB) இயந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களை அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பயன்படுத்துதல்.
- வனப்பகுதியின் சில பகுதிகளுக்கு தீ வைத்தல்.
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்துக் கொண்டிருந்த குழுவொன்று சுற்றிவளைக்கப்பட்டதாக பிரதான ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அந்தப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என்பதை நாம் ஆராய்ந்தோம்.
அதன்போது தெரியவந்ததாவது, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி சிலர் வனப்பகுதியை அழித்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகளும் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளும் இணைந்து ஜூலை 24ஆம் திகதி சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்களையும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட JCB இயந்திரத்தையும் கைது செய்ய முற்பட்டபோது, சந்தேகநபர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அதிகாரிகளைத் தாக்கியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழப்பமான முறையில் நடந்துகொண்ட 09 பேரை JCB இயந்திரத்துடன் கைது செய்து அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த ஊடகச் செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எனினும், குறித்த செய்தி அறிக்கைகளில் இந்த இடத்தில் LTTE பயிற்சி முகாம் ஒன்று இருந்ததாகவோ, கட்டிடம் ஒன்று இருந்ததாகவோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையம் போன்ற வேறு எந்த விடயமும் இருந்ததாகவோ எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்
நாம் மேற்கொண்ட விசாரணையின்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தது. அதன்போது, குறித்த பகுதியில் 21 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளதும், அங்கு கட்டிடமொன்று இருப்பதும் உண்மை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
அந்தக் கட்டிடத்தில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்று நடத்தப்பட்டு வருவதுடன், அதற்கு மேலதிகமாக கற்றாழை மற்றும் ஏனைய காய்கறிப் பயிர்ச்செய்கைகளும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சுமார் 100 பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்த வனப்பகுதியை அழித்தமை தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்தக் காணியின் உரிமையாளராக முன்வரும் நபர், குறித்த காணியின் மீது தமக்கு உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார். எனினும், வன அதிகாரிகள் தரப்பினர் இந்தப் பகுதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, குறித்த நபருக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதுவே குறித்த சம்பவத்தின் பின்னணி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மேலும், காணியின் உரிமையாளராக முன்வரும் நபர், இந்தக் காணியின் மீது தமக்கு உரிமை இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த இடம் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறும் அல்லது இடம்பெறக்கூடிய இடமாகவோ, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இடமாகவோ இருப்பது தெரியவரவில்லை என அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் காணியின் உரிமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் போன்ற விடயங்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதமும் இதுபோன்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குழப்பமாக நடந்துகொண்டமை தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணியின் உரிமை தொடர்பில் பிரச்சினைக்குரிய நிலைமை காணப்படுவதாகவும், எனினும் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான எந்தவொரு தகவலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ
2026 ஆகஸ்ட் 18ஆம் திகதி, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, பளை / அக்கராயன் வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாம் ஒன்று இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்த விடயங்கள்
இந்தச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னகீபுரம் (மேற்கு) கிராம அலுவலர் பிரிவின் முக்கொம்பன் பகுதியில் இடம்பெற்றதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலப்பகுதி 1919 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட 764ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன. 2026 ஜனவரி மாதத்தில் மூன்று மாடிக் கட்டிடம் (தற்போது நான்கு மாடிகள்) ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் உரிமையாளராக அடையாளம் காணப்பட்ட தியாகராஜா குணதீபன் என்பவர் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலத்தையும் பின்னர் சுமார் 20 ஏக்கர் நிலத்தையும் அனுமதியின்றி அழித்து, கற்றாழை மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு வந்ததுடன், மூன்று மாடிக் கட்டிடத்தில் இயந்திரங்களுடன் கூடிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். கிராமத்தில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், தொழிற்சாலை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன அதிகாரிகள் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிமையாளருக்கு எதிராக ஏழு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். 2026 பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான், அவர் குறித்த காணிக்குள் நுழைவதற்குத் தடை விதித்துள்ளார். அந்தத் தடை இதுவரை நீக்கப்படவில்லை. அடுத்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அனுமதியின்றி மணல் அகழ்வு மற்றும் அதனைப் போக்குவரத்து செய்தமை தொடர்பாக பொலிஸார் தனியான வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளனர். 2026 ஜூலை 24ஆம் திகதி கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக காணியின் உரிமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் STF உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்குகள் தொடர்ந்தும் விசாரணையில் உள்ளன.
மேலும், இந்த இடத்தில் LTTE பயிற்சி முகாம் ஒன்றோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமொன்றோ இருந்ததாகப் பரப்பப்பட்ட தகவல்கள் முற்றிலும் போலியானவை எனவும், உண்மையான நிலைமை என்னவென்றால், கடந்த ஒன்றரை வருடமாக இடம்பெற்று வரும் அனுமதியற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் வனப்பகுதி அழிப்பு நடவடிக்கைகளே எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் போலிச் செய்தியை உருவாக்கி பரப்பிய தரப்பினருக்கு எதிராகவும் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதப் பயிற்சி முகாம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய நபர் கைது
பளை காட்டுப் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாமொன்றும் குண்டு தயாரிப்பு நிலையமொன்றும் இருப்பதாக பொய்யான தகவல்களைப் பரப்பியமை தொடர்பில், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய நபர் 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். Link
அக்கராயன் / கிளிநொச்சி பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழிக்கும் சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன
அக்கராயன் / கிளிநொச்சி பகுதிகளில் மக்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழிப்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பரந்தளவிலான காணிப் பிரச்சினையின் ஒரு பகுதியாகும். 2026 பெப்ரவரி மாதத்திலும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட 10,821 ஏக்கர் காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறு வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், அந்தக் கூட்டத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் 10,821 ஏக்கரில் 1,088 ஏக்கர் காணிகளை மட்டுமே விடுவிக்கப் பரிந்துரைத்திருந்ததாகவும், முழுமையான 10,821 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் வலியுறுத்தியதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
சுருக்கம்
சமூக ஊடகங்களில், பளையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் LTTE பயிற்சி முகாமொன்றும் குண்டு தயாரிப்பு நிலையமொன்றும் இருப்பதாகத் தகவல் பரவியது. இந்தக் குற்றச்சாட்டை முதன்முதலில் முன்வைத்தவர், ‘கண்டங்களுக்கிடையிலானமனித உரிமைகள் ஆணைக்குழு’ (ICHRC) எனப்படும் தனியார் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர ஆவார்.
எனினும், எமது விசாரணையில் தெரியவந்ததாவது, இந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்த உண்மையான இடம் பளை அல்ல; கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னகிபுரம் பகுதியில் அமைந்துள்ள அக்கராயன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அங்கு சுமார் 21 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்பட்டு, மூன்று மாடிக் கட்டிடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலோ அல்லது உத்தியோகபூர்வ நீதிமன்ற அறிக்கைகளிலோ அந்த இடத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவோ அல்லது அவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதாகவோ எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை. அந்தக் கட்டிடத்தில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்று நடத்தப்பட்டு வருவதுடன், காணியில் கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணியின் உரிமை தமக்கு இருப்பதாகக் கூறும் நபருக்கு எதிராக, அது வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வன அதிகாரிகளினால், நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு அறிக்கைகள் அனைத்தும் வனப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான சட்ட மீறல்கள் தொடர்பானவையாகும். அவற்றில் எதிலும் பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு குறிப்பும் இல்லை.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்தமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கடந்த ஜூலை மாதம் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த இடத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவோ அல்லது பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாகவோ எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், பொய்யான தகவல்களைப் பரப்பியமை தொடர்பாக மேற்குறிப்பிட்ட விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய நபர் 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



