
INTRO
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் கடந்த வெள்ளிக்கழமை (2026.09.04) கைது செய்யப்பட்டிருந்தார். இவரின் கைதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
அந்தவகையில் தற்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அவர்கள் சந்தித்து கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பில் கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

அவசர அவசரமாக மஹிந்தவை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சாணக்கியன். கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறையில் உள்ள நாமல் ராஜபக்சயை பினையில் எடுப்பதற்காக கலந்து ஆலோசித்தனர்… என தெரிவித்து குறித்த பதிவான 2026.09.05 ஆம் திகதி பதிவேற்றப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டு அடுத்த நாளான சனிக்கிழமை, தமிழ் தேசிக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திருப்பார்களாயின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தமிழரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தமை தொடர்பில் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் பதிவுகளை வெளியிட்டுள்ளனரா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த பதிவுகளையும் காணமுடியவில்லை.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இவ்வாறான சந்திப்பு இடம்பெற்றதா என்பதனை அறிய நாம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உண்மையில் இவ்வாறான சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கும் பட்டசத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களாகிய எமக்கு அது குறித்த தகவல்கள் கிடைத்திருக்கும் எனினும் அவ்வாறான சந்திப்பொன்று இடம்பெற்றமைக்கான எந்த தகவல்களும் எமக்கு கிடைக்கவில்லை என்பதனை அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன்
இந்த விடயம் தொடர்பில் நாம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் இந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் நாளிலிருந்து இப்போது வரை தாம் மட்டக்களப்பிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த கைது தொடர்பிலோ அல்லது நாமல் ராஜபக்ஷவை பிணையில் எடுப்பது தொடர்பிலோ ஆலோசிக்க வேண்டிய அவசியம் தனக்கோ, சுமந்திரனுக்கோ அல்லது தமிழரசுக் கட்சிக்கோ இல்லை என்றும் இவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எம். ஏ. சுமந்திரன் அவர்கள் இந்நாட்களில் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான வேலைகளில் இருப்பதனால் அவரை தொடர்புகொள்வது சற்று கடினமாக இருக்கும் என தெரிவித்த சாணக்கியன், குறித்த பதிவில் குறிப்பிடுவதனைப் போன்று சுமந்திரன் அவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று தமிழரசுக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நாமல் ராஜபக்ஷவின் கைதின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனரா என வினவியபோது, அவ்வாறான சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டார்.
சமூக ஊடகப் பதிவுடன் பகிரப்பட்ட புகைப்படம்
குறித்த சமூக ஊடகப் பதிவுடன் பகிரப்பட்டிருந்த புகைப்படம் தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, அந்த புகைப்படமானது 2024 பெப்ரவரி மாதத்தில் சுமந்திரன் அவர்களின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ, தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள சுமந்திரன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. Link| Link
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்புகள்
2022ஆம் ஆண்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கான ஆஞ்சியோகிராம் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக, இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன
இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு வைத்தியசாலை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
2022 மார்ச் மாதம் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அப்போதைய அரசாங்கத்திற்கிடையிலான கலந்துரையாடலில், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதேபோன்று Daily FT வெளியிட்ட செய்தியிலும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் காணி, தடுப்புக்காவலில் உள்ளவர்கள், காணாமல் போனோர் மற்றும் அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் சந்தித்து, கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பில் கலந்தாலோசித்ததாக பகிரப்படும் செய்தி தவறானது என்பதுடன் அவ்வாறான சந்திப்பொன்று இடம்பெறவில்லை என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் ஜனாதபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



