
INTRO
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (2) இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பரீட்சை நடைபெற்ற தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததன் மூலம் கவனத்தை பெற்ற பாடசாலை மாணவர் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் பதிவுகள் பரவி வந்தன.
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அடிச்சி விட்டானோ தெரில்ல எனவும் இறுதியில் நாடே எதிர்பார்த்த பையன் 193 புள்ளிகளை பெற்றுவிட்டான் என குறிப்பிட்டு நேற்று (2026.09.02) பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பின்னணியாக அமைந்த விடயங்கள்
சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், 2026 ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர், பாடசாலை வெளியில் ஊடகவியலாளர்களிடம் பரீட்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவர்களில் ஒருவராவார்.
அன்றைய தினம் கருத்து தெரிவித்த பெரும்பாலான மாணவர்கள், பரீட்சை மிகவும் இலகுவாக இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
மேற்கண்ட சமூக ஊடகப் பதிவுகளில் காணப்படும் மாணவரும் மிகவும் இயல்பாக, “பரீட்சை மிகவும் இலகுவாக இருந்தது”, “Easy-Peasy” மற்றும் “சிப்பி கேளி” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பரீட்சை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
மேலும், அந்தக் காணொளியில் குறித்த மாணவர் உள்ளிட்ட சில மாணவர்களின் பரீட்சை இலக்கங்களும் காணப்பட்டதால், அவர் கூறியதைப் போன்று அவர் புலமைப்பரிசில் பரீட்சையில் எவ்வாறு பெறுபேறு பெற்றுள்ளார் என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்ற கருத்தும் அன்றைய தினங்களில் சமூக ஊடகங்களில் எழுந்திருந்தது.
பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, குறித்த மாணவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகக் கூறி சமூக ஊடகப் பதிவுகள் பரவத் தொடங்கின.
193 புள்ளிகளைப் பெற்ற மாணவர் யார்?
எனினும், 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், இம்முறை பரீட்சையில் சிங்கள மொழி மூலம் நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இந்தச் சாதனையைப் பெற்ற மாணவர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ் மொழி மூலம் நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளியாக 188 புள்ளிகள் பதிவாகியுள்ளதாகவும், அதனைப் பெற்றவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், குறித்த மாவட்டத் தகவல்களின் அடிப்படையில் நாட்டின் பிரதான ஊடகங்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர் தொடர்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன.
அந்தச் செய்திகளின் மூலம், சமூக ஊடகங்களில் வைரலான மாணவரும் உண்மையில் 193 புள்ளிகளைப் பெற்ற மாணவரும் ஒரே நபர் அல்ல என்பது தெரியவந்தது.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய 193 புள்ளிகளைப் பெற்றவர் குருநாகல் மாவட்டம், மஹவ கல்வி வலயத்தைச் சேர்ந்த எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலையின் மாணவர் தனோஜ் தீக்ஷண வீரசேகர ஆவார்.
எனவே, சமூக ஊடகங்களில் காட்டப்பட்டுள்ள மாணவர் உண்மையில் 193 புள்ளிகளைப் பெற்ற மாணவர் அல்ல என்பது உறுதியாகிறது. அத்தோடு பரீட்சை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாணவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு முன்பாக கருத்து தெரிவித்த மாணவராவார்.
மாணவரின் பரீட்சை இலக்கத்தைப் பயன்படுத்திய விதம்
எனினும், சமூக ஊடகங்களில் வைரலான மாணவரின் பரீட்சை இலக்கத்தைப் பயன்படுத்தி, சில சமூக ஊடகப் பயனர்கள் அவரது பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் தேடியுள்ளனர்.
அவ்வாறு பெறப்பட்ட பெறுபேறுகளின் Screenshots சமூக ஊடகங்களில் வெளியிட்டு, குறித்த மாணவரை கேலி செய்யும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில், பரீட்சை பெறுபேறுகளை அனுமதியின்றி இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அந்த விதிமுறையைப் பொருட்படுத்தாமல் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதனை காணமுடிந்தது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அறிவிப்பு
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை டிஜிட்டல் தளங்களில் அசௌகரியத்திற்கு, மன அழுத்தத்திற்கு அல்லது கேலிக்கு (Cyberbullying) உள்ளாக்குவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சு
குறித்த மாணவரின் பரீட்சை பெறுபேறு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என நாம் கல்வி அமைச்சிடம் கேட்டறிந்தோம்.
இதன்போது பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளபடி, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ள மாணவரின் பரீட்சை இலக்கத்தைப் பயன்படுத்தி பெறுபேற்றைச் சரிபார்க்கும் வசதி தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
எந்தவொரு மாணவரின் பெறுபேற்றையும் சரிபார்ப்பதைத் தடைசெய்யும் அதிகாரம் அமைச்சுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்துக்கோ இல்லை என்றாலும், குறித்த மாணவரின் பெற்றோர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்
மேலும், 193 புள்ளிகளைப் பெற்ற மாணவர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அல்ல என்றும் குறிப்பிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர், சில மாணவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு பரீட்சை நிலையங்களுக்கு அருகில் மாணவர்களிடம் கருத்துகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட உத்தியோகபூர்வ அறிவுறுத்தலையும் கடுமையான எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது.
பரீட்சை முடிந்து வெளியே வரும் எந்தவொரு பாடசாலை மாணவரின் கருத்தையும் அவர்களின் பெற்றோர் அல்லது அதிபர்/ஆசிரியர்களின் தெளிவான அனுமதியின்றி பதிவு செய்வதோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதோ கூடாது என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
இம்முறை பரீட்சைக்கான அடிப்படை வெட்டுப்புள்ளி 139 புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்று சுமார் 56,000 மாணவர்கள் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை பரீட்சைக்காக 294,089 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதற்கான மீளாய்வு விண்ணப்பங்களை கோரும் திகதிகள் அடுத்த சில நாட்களுக்குள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்தில் மாணவர்கள் 6ஆம் தரத்தில் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்குத் தேவையான குறிப்பிட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி, அவற்றை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பொதுவாக 40 நாட்கள் அல்லது இரண்டு மாதங்களுக்கு அண்மித்த காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆனால், இம்முறை 289,867 மாணவர்களின் பெறுபேறுகளை சுமார் 24 நாட்களுக்குள் தயாரித்து முடிக்க பரீட்சைகள் திணைக்களத்தால் முடிந்துள்ளது.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த பின்னர், பரீட்சை மிகவும் இலகுவாக இருந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாணவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானவை என்பதுடன் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றவர், குருநாகல் மாவட்டம், மஹவ கல்வி வலயத்தில் உள்ள எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர் தனோஜ் தீக்ஷண வீரசேகர ஆவார் என்பதுடன் சமூக ஊடகங்களில் வைரலான மாணவரும் 193 புள்ளிகளைப் பெற்ற மாணவரும் ஒரே நபர்கள் அல்ல என்பதுவும் கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



