INTRO :
சமீபத்தில் BARISTA உணவகத்திற்கு எதிராக யாழில் எழுந்த போராட்டம் என சமூகவலைத்தளங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “”இறைச்சி உணவுகளை விற்றீர்கள், சிங்கள வியாபாரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வேண்டாம்!” என்று கூறிக்கொண்டு தமிழ் தீவிரவாதிகள் குழுவொன்று BARISTA உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது.. இப்போது இவர்களின் சத்தம் எப்படி இருக்கிறது? ” என இம் மாதம் 05 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (05.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த காணொளியானது சிங்கள வியாபாரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வேண்டாம் என்ற ரீதியில் சிங்கள மொழியில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் காணக்கிடைத்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
யாழ்ப்பாணத்தின் இதுபோன்ற பிரசித்தி பெற்ற BARISTA உணவகத்திற்கு எதிராக போராட்டம் இத்தினங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து சமூகவலைத்தளங்கள் மற்றுமின்றி பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கும்.
ஆயினும் எமது ஆய்வின் போது, அவ்வாறான எவ்விதமான செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி (2025.05.20) மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பது கண்டறிய முடிந்தது.
யாழில் BARISTA உணவகம் திறப்பு
கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி அன்று யாழில் BARISTA உணவகம் யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் திறக்கப்பட்டது. குறித்த திறப்பு தொடர்பாக BARISTA உணவகத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி எமக்கு காணக்கிடைத்தது.
மக்கள் மத்தியில் எதிர்ப்பு
யாழ். நல்லூர் ஆலயத்தினை சுற்றியமைந்துள்ள உணவகங்கள் அனைத்தும் சைவ உணவங்களாக இருந்தமையினாலும், குறித்த BARISTA உணவகத்தில் அசைவ சாப்பாடுகள் விற்பனை செய்தமையினாலும், குறித்த எதிர்ப்பலை மக்கள் மத்தியில் உருவானமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அருகில் காணப்படும் உணவகங்கள்
சைவ உணவகமாக மாறிய BARISTA
மக்களின் எதிர்பலையின் விளைவாக யாழில் திறக்கப்பட்ட குறித்த BARISTA உணவகம் சைவ உணவுகளை மட்டும் விற்பனை செய்யவுள்ளதாக அக்காலக்கட்டத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்டு, அதற்கமைய சைவ உணவுகள் விற்பனைக்கு உள்ளதாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகரசபையினரால் அகற்றம்
யாழ் நல்லூர் ஆலய முன்வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு குறித்த காலத்தில் பலதரப்பட்ட அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தநிலையில், அவ் உணவகத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை யாழ் மாநகரசபையினரால் கடந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி (22.05.2025) அகற்றப்பட்டுள்ளது.
BARISTA நல்லூர் ஆலயத்திற்கு அருகில் அமைத்த உணவகம் மூடல்
மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலை காரணமாக நல்லூர் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருந்த BARISTA உணவகம் முற்றாக குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது.
BARISTA நிறுவனம்
இது குறித்து நாம் BARISTA தலைமை காரியாலத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த பிரதேசத்தில் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்பலையின் நிமிர்த்தமாக அங்கிருந்த உணவகத்தினை முற்றாக அகற்றி விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Cargills Square கட்டடத்தில் தற்போது ஒரு கிளை இயங்கி வருவதாகவும் அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
குறித்த கிளை திறப்பினை அவர்களின் இணையத்தளத்தில் பதிவிட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது. Link
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு
நாம் கூடுதல் விளக்கத்தினை பெற யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, சமீபத்தில் BARISTA உணவகத்திற்கு எதிராக எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பகுதியில் இருந்த கடையும் நீக்கப்பட்டுள்ளதாகவும், BARISTA உணவகத்திற்கு எதிராக கடந்த வருடமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் எமக்கு உறுதி செய்தார்.
யாழ்ப்பாண பிரதேச ஊடகவியலாளர்
நாம் யாழ்ப்பாண பிரதேச ஊடகவியலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, சமீபத்தில் அவ்வாறான போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இது கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி எனவும் எமக்கு தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சமீபத்தில் BARISTA உணவகத்திற்கு எதிராக யாழில் எழுந்த போராட்டம் என பகிரப்படும் காணொளி கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுடன் இது சிங்கள வியாபாரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வேண்டாம் என முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



