
INTRO :
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இலங்கை தமிழ் வானொலி மீண்டும் தமிழ் நாட்டு மக்களுக்காக அலைவரிசை ஊடாக இயங்கவுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “மீண்டும் தமிழ் மண்ணில் இலங்கை தமிழ் வானொலி!!!” என இம் மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (27.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தினால் இவ்வாறான ஒரு சேவை மீண்டும் மக்கள் மத்தியில் அலைவரிசை வாயிலாக இயங்கவுள்ளதாயின் அது தொடர்பாக அந்நிறுவனம் மற்றும் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கம். ஆயினும் எமது ஆய்வின் மூலம் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியாகி இருந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
நாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் தமிழ் பிரவு வானொலிகளின் சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தபோது அவ்வாறான செய்திகள் எதுவும் பகிரப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைக்கவில்லை.
ஆகவே நாம் இது தொடர்பாக உண்மையினை கண்டறிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் தமிழ் பிரிவின் நிர்வாக தலைவரை தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு வினவினோம்.
அவர் குறித்த தகவல் முற்றிலும் போலியானது எனவும், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு வானொலி இன்றளவும் பிற நாட்டு ரசிகர்களுக்காக இணையவழியாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC)
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிபிசி (BBC) தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், உலகின் இரண்டாவது வானொலி ஒலிபரப்பு சேவையாக 1925 டிசம்பர் 16 அன்று இலங்கையில் தனது வானொலி சேவையை முதன்முதலில் சிலோன் ரேடியோ எனும் பெயரில் தொடங்கியது.
1922 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த Edward Harper என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
இவர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பயை ” வயர்லெஸ் கிளப்”எனும் பெயரில் கொழும்பின், மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து 1924 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அப்போதைய இலங்கை கவர்னர் சர் வில்லியம் ஹென்றி ஆற்றிய உரையை ஒலிபரப்பினார்.
சோதனை வெற்றியடையவே, அடுத்த ஆண்டு பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது.
இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்தியஅலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப் படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது.
போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
1950-களில் இந்திய அரசால் அகில இந்திய வானொலியில் (AIR) திரைப்படப் பாடல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலத்தில், ரேடியோ சிலோனின் இந்தி மற்றும் தமிழ் சர்வதேசச் சேவைகள் தென்னிந்தியா மற்றும் வடஇந்திய மக்களிடையே முதன்மைப் பொழுதுபோக்கு ஊடகமாகத் திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1967 ஆம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது.
1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37 ஆம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது.
கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு வானொலி
1967-இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) உருவான பிறகு, இச்சேவை ‘SLBC வெளிநாட்டுச் சேவை’ (Overseas Service) எனவும், பின்னர் ‘கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு வானொலி’ (Colombo International Radio – CIR) எனவும் பெயர் பெற்றது.
பின்னர் காலக்கட்டத்தில் நவீன டிஜிட்டல் கட்டமைப்புக்கள் வளர்ச்சியடைந்தமையினால், 2000-களின் தொடக்கத்தில் குறையலை (Shortwave) ஒலிபரப்புகளுக்கான செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நேயர்கள் டிஜிட்டல் நோக்கி மாறியதால், இச்சேவை படிப்படியாக இணையவழி Streaming அல்லது Internet Radio (இணைய வானொலி) சேவையாக மாற்றப்பட்டது.
கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு வானொலி சேவை நிறுத்தம்
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி ( 31.05.2008 ) அன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழக நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை நிறுத்திக் கொண்டது.
மீண்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி (20.01.2022) இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ் நாட்டு நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி தனது ஒலிபரப்பை 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த வானொலியை மத்திய அலைவரிசையில் 873 கி.ஹெர்ட்ஸில் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர். Link
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இலங்கை தமிழ் வானொலி மீண்டும் தமிழ் நாட்டு மக்களுக்காக அலைவரிசை ஊடாக இயங்கவுள்ளதாக என பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



