
INTRO :
ராசையா பார்த்தீபன் என்ற திலீபனின் நினைவேந்தல் நிகழ்வொன்றில், அரசாங்க அமைச்சர் ஒருவர் கலந்துகொண்டதாகவும், பிரதி அமைச்சர் ஒருவர் திலீபன் ஒரு விடுதலைப் போராட்ட வீரன் எனக் கூறி அவரைப் பாராட்டி கருத்துத் தெரிவித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01

சமூகவலைத்தளங்களில் “கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் வடக்கில் இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாகக் கூறி இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது: “முதலில் LTTE ஆயுதப் பிரிவில் இணைந்து பின்னர் LTTE. அரசியல் தலைவரான திலீபனை இந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் வணங்குகிறார். எனவே நாங்கள் யாரிடம் சொல்வது? பயங்கரவாதிகள் வீரர்களாகவும், வீரர்கள் பயங்கரவாதிகளாகவும் மாறும் காலம் உருவாக வழிவகுக்கும் ஒரே பெயர் மறுமலர்ச்சியா..? ” என சிங்கள மொழி மூலம் குறித்த பதிவு இம் மாதம் 18 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (18.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02

திலீபன் ஒரு விடுதலைப் போராட்ட வீரன் என்றும், “சகோதரன் திலீபனின் ஒரு சிலைக்கும் பயப்படும் பழங்குடியினர்கள் உள்ள ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம்” என்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கருத்து தெரிவித்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பின்வரும் பதிவு பகிரப்பட்டு வருகிறது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அமைச்சர் சந்திரசேகர் அத்தகைய நினைவேந்தல் நிகழ்வு எதிலும் கலந்துகொண்டதாக பிரதான ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. அத்துடன், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தையும் அங்கீகரிக்கப்பட்ட பிரதான ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை.
கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அமைச்சர் கடந்த சில நாட்களில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டாரா என்று அமைச்சரின் ஊடகச் செயலாளரிடம் நாங்கள் வினவியபோது, அமைச்சர் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றும், சம்பந்தப்பட்ட புகைப்படம் Edited என்றும் செயலாளர் தெரிவித்தார். மேலும், அமைச்சர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் ஊடகச் செயலாளர் குறிப்பிட்டார்.
Edited புகைப்படம்
அமைச்சர் இராமலிங்கம் திலீபன் நினைவேந்தலில் கலந்துகொண்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, Reverse Image தேடலை மேற்கொண்டோம்.
இதன்போது, இந்த புகைப்படம் யாழ்ப்பாணம் மாநகரசபையில் திலீபனுக்காக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
மூலப் புகைப்படத்தைக் கொண்ட மேலும் சில செய்தி அறிக்கைகளை எமக்கு கிடைக்கப்பெற்றது. Link 1 | Link 2
அந்த புகைப்படங்களில் ஒன்றில் அமைச்சரின் முகத்தைப் பொருத்தி எடிட் செய்யப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.

இதேவேளை, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களை அவதானிக்கும் போது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாவதுடன், அதில் Gemini AI இன் அதிகாரப்பூர்வ Logo தெளிவாகக் காண முடிகிறது.

இதற்கமைய, அமைச்சர் இராமலிங்கம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டதாகப் பரவி வரும் புகைப்படம் போலியாகத் திருத்தப்பட்டது (Edited) என்பது தெளிவாகிறது.
Claim 02
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர திலீபன் தொடர்பாக கூறியதாகக் குறிப்பிடப்படும் இந்த அறிக்கையைக் கொண்ட பதிவு, Newsfirst இணையதளத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் செய்திப் பதிவினை (Template) போன்று அதன் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் (Logo) வெளியிடப்பட்டிருந்த போதிலும், Newsfirst உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவ்வாறான எந்தவொரு பதிவும் காணப்படவில்லை.
இதனை உறுதிசெய்ய நாம் குறித்த நிறுவனத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, தமது உத்தியோகபூர்வ செய்தி வடிவத்தைப் போலியாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பதிவு இதுவென்றும், தமது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறான பதிவு எதையும் வெளியிடவில்லை என்றும் Newsfirst நிர்வாகி உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் பரவி வருவது போல திலீபன் குறித்து பிரதி அமைச்சர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது, பிரதான ஊடகங்கள் வாயிலாக நாம் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பில் மேலும் உறுதி செய்யப்பட்டது.
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
திலீபன் தொடர்பாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பதிவு குறித்து அவரது ஊடகச் செயலாளரிடம் நாங்கள் வினவினோம். பிரதி அமைச்சர் எவ்வேளையிலும் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும், இது ஒரு போலிப் பதிவு என்றும் ஊடகச் செயலாளர் இதன்போது எமக்கு அறியத்தந்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், திலீபன் நினைவேந்தல் கலந்துக்கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சரின் எரங்க குணசேகரவின் கருத்து என பகிரப்படும் தகவல்கள் தவறானவை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



