INTRO :
திருமண நிகழ்வுகளின் போது இசை ஒளிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் என சமூகவலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “இசை நிகழ்ச்சிகள், வர்த்தக நிலையங்களில் இசை ஒளிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கல் புதிய ஒழுங்குவிதிகள் அறிவிப்பு!
இலங்கையில் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் திருமணங்கள், விருந்துகள், நிறுவன நிகழ்வுகள், தட்டுச் சுழற்றி இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி வங்கிகள் மற்றும் நவீன அங்காடி நிலையங்களிலும் இசை ஒளிபரப்புவதற்கு அனுமதிப்பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்கி புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இப் புதிய நடைமுறைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் சுபநிகழ்வுகளை நடத்தும் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் இதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20,000 ரூபா முதல் 125,000 ரூபா வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக, இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இலங்கை இசைப் படைப்புகள் மற்றும் இந்தியச் செயல்திறன் உரிமைகள் சங்கத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்தி மற்றும் தமிழ் இசைப் படைப்புகளுக்கு மட்டுமே இந்த அனுமதிப்பத்திர நடைமுறை பொருந்தும்.
ஆங்கிலம் அல்லது ஏனைய வெளிநாட்டு இசையை மட்டுமே பயன்படுத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை.
திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், தனியார் விருந்துகள், நிறுவனங்களின் கொண்டாட்டங்கள், விருது வழங்கும் விழாக்கள், உற்பத்திப் பொருள் அறிமுக விழாக்கள், இசை பொழுதுபோக்குடன் கூடிய மாநாடுகள், தட்டுச் சுழற்றி இசை நிகழ்ச்சிகள், நேரடி இசைக்குழு நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த அனுமதிப்பத்திரம் கட்டாயமாகும்.
தட்டுச் சுழற்றி இசை நிகழ்வுகளுக்கு 100 பேருக்கும் குறைவான பார்வையாளர்களுக்கு 20,000 ரூபா , 100 முதல் 300 பேருக்கு 30,000 ரூபா மற்றும் 300 பேருக்கு மேற்பட்டோருக்கு 40,000 ரூபா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேரடி இசை நிகழ்வுகளுக்கு முறையே 25,000 ரூபா, 35,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கட்டணம் அறவிடப்படும்.
தனியார் அல்லது நிறுவனங்களின் தட்டுச் சுழற்றி இசை நிகழ்வுகளுக்கு 25,000 ரூபா , 40,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கட்டணமும், நிறுவனங்களின் நேரடி இசை நிகழ்வுகளுக்கு முறையே 50,000 ரூபா, 75,000 ரூபா மற்றும் 125,000 ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது.
பாடகர்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் அங்கீகாரம் பெறாத இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு உரிய பதிப்புரிமைக் கட்டணம் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டதாக இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் நிலார் என். காசிம் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ரீதியாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளையே இது முதன்மையாக இலக்கு வைப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் சிறு அளவிலான கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய விதிகளின்படி, உரிய அனுமதிப்பத்திரம் இல்லாத நிகழ்வுகளுக்கு விடுதிகள் அனுமதி அளிக்கக் கூடாது என்பதுடன், நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட இசையை அடையாளம் காண்பதற்காக நிகழ்வு முடிவடைந்த பின்னர் அதன் ஒலிப்பதிவை ஏற்பாட்டாளர்களிடமிருந்து விடுதிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் நவீன அங்காடி நிலையங்கள், வங்கிகள், சில்லறை விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், பயணிகள் தொடருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கும் இந்த அனுமதிப்பத்திர நடைமுறை விரிவாக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தக வளாகங்களுக்கு அவற்றின் பரப்பளவு மற்றும் உள்ளூராட்சி அதிகார வரம்பிற்கு ஏற்ப வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.” என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (21.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் (ACPOSL) புதிய இசை உரிம ஒழுங்குமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த முறைமையை உள்ளடக்கி குறித்த அமைப்பானது அரசாங்கத்தின் வர்த்தமானிப் பத்திரிகையில் அரச சார்பற்ற அறிவிப்பாகத் தங்கள் உரிமக் கட்டண அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இசை உரிம முறைமையின் மூலம் வணிக ரீதியான இடங்கள் மற்றும் அமைக்கப்பட்ட விழாக்களில் பாடல்களை இசைப்பதற்கு உரிமக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த வர்த்தமானி அறிவித்தல் இங்கே.
வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் மற்றும் பதிப்புரிமை பாதுகாக்கப்பட்ட இசைப் படைப்புகள், பாடல்கள் மற்றும் மெட்டுகளை இசைத்தல்/பாடுவதற்கு மட்டுமே, அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உரிமக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது,.
சிங்கள திருமண நிகழ்வுகளில் பாடப்படும் மத ரீதியான மற்றும் பாரம்பரிய ஆசீர்வாதப் பாடலான ஜயமங்கல கீதத்திற்கு (Jayamangala Gatha) எந்தவொரு அனுமதிப் பத்திரமோ அல்லது கட்டணமோ விதிக்கப்படவில்லை.
அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் மற்றும் பதிப்புரிமை பாதுகாக்கப்பட்ட இசைப் படைப்புகள், பாடல்கள் மற்றும் மெட்டுகளை இசைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 20,000 முதல் ரூ. 125,000 வரையிலான கட்டணங்கள், திருமண நிகழ்வில் சிங்களம், இந்தி அல்லது தமிழ் வணிகப் பாடல்களைப் பயன்படுத்துவதற்கும், அந்நிகழ்வில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்குமே பொருந்தும்.
இது தொடர்பான ஊடக அறிக்கைகள் இங்கே மற்றும் இங்கே.
அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் முக்கியமாக 4 விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- திருமணங்கள், தனிநபர் விருந்துகள், நிறுவன விழாக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்ற இடங்களில் வணிக ரீதியாகப் பாடல்களை இசைப்பதற்கு முன்பாக ACPOSL சங்கத்திடமிருந்து செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற வேண்டும்.
- நிகழ்வில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ( திருமண விருந்துகளுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 125,000 வரை) மற்றும் வணிக இடங்களின் சதுர அடி பரப்பளவின் அடிப்படையில் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட கட்டணப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரிமம் உள்நாட்டு இசைப் படைப்புகளுக்கும், சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்தி மற்றும் தமிழ் இசைகளுக்கும் மட்டுமே பொருந்தும்.
- நிகழ்வொன்றுக்கு 14 நாட்களுக்கு முன்னதாக உரிமத்தைப் பெற வேண்டும் என்றும், ஹோட்டல் மற்றும் மண்டப உரிமையாளர்கள் தங்கள் வளாகத்திற்குள் உரிமமின்றி இசை இசைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அடங்கியுள்ளது.
உரிம முறைமை வெளியிடப்பட்ட பின்னர் எழுந்த விவாதங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட புதிய முடிவுகள்:
புதிய இசை உரிம முறைமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான விவாதங்கள் மற்றும் இத்துறை சார்ந்த தரப்பினரின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் பல புதிய முடிவுகளை அறிவித்துள்ளது.
உரிம முறைமை இடைநிறுத்தப்படவில்லை:
இந்த உரிம முறைமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் உண்மையற்றவை என ACPOSL நிர்வாக சபை வலியுறுத்துகிறது. அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும், எனினும் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இதன் சில பகுதிகளைத் திருத்தவும் தளர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிகழ்வு மேலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தட்டு உற்பத்தியாளர்கள்/DJ கலைஞர்கள் சங்கத்துடன் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடல்களின் பின்னர், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள உரிமக் கட்டண அமைப்பின் சில அம்சங்களைத் திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் வீடுகளில் நடத்தும் தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகள் எதுவுமே இதில் அடங்காது என்பதை சங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் நியாயமான, வெளிப்படைத்தன்மையான மற்றும் எளிமையான கட்டணக் கட்டமைப்பு மற்றும் சிறிய ஹோட்டல்களுக்கான விசேட சலுகைக் கட்டணப் பட்டியல் வரவிருக்கும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் வெளியிடப்படும் என ACPOSL சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த உரிம முறைமையின் நோக்கம் என்ன?
பாடல் வரிகளை எழுதுபவர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் படைப்புகள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் போது கிடைக்க வேண்டிய நியாயமான பலன்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேலும் இது அரசாங்க வரி அல்ல என்பதோடு, வீடுகளில் நடத்தப்படும் தனிப்பட்ட உள்வீட்டு நிகழ்வுகளுக்கோ அல்லது இசைக்குழுக்கள் மற்றும் இசைக்கலைஞர்களிடமிருந்தோ இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது. கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் பெறுவதற்கான பொறுப்பு நிகழ்வை நடத்தும் அமைப்பாளர் அல்லது உரிய இடத்தின் உரிமையாளரிடம் மட்டுமே உள்ளது.
இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்:
புதிய உரிம முறைமையின் கீழ் விருந்துகள் மற்றும் திருமண நிகழ்வுகளில் ஜயமங்கல காதா பாடுவதற்கு அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் என பரப்பப்படும் பதிவு குறித்து இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்திடம் நாங்கள் வினவியபோது, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் மற்றும் பதிப்புரிமை பாதுகாக்கப்பட்ட இசைப் படைப்புகளுக்கே உரிமம் மூலம் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜயமங்கல காதாவிற்கு அவ்வாறு கட்டணம் வசூலிப்பதோ அல்லது அனுமதிப் பத்திரம் பெறுவதோ தேவையில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு
இது தொடர்பாக அவர்கள் தெளிவூடல் தொடர்பாக மேற்கொண்ட ஊடக சந்திப்பும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
1. பாடல் உரிமைகள் மற்றும் படைப்பாளிகளின் பாதுகாப்பு
- ஒரு பாடலின் பாடல் வரிகள், இசையமைப்பு ஆகியவை அந்தந்த படைப்பாளிகளுக்கே சொந்தமானவை. மற்றொருவர் அந்தப் பாடலைத் தன் விருப்பப்படி யாருக்கும் பயன்படுத்த அனுமதி அளிக்க முடியாது.
- படைப்பாளிகளின் உழைப்பிற்கான நியாயமான பலன்களும், நாட்டிற்கான அந்நியச் செலாவணியும், அரசாங்கத்திற்கான வரியும் சரியாகச் சென்றடைவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. சர்வதேச CISAC அமைப்பின் அங்கத்துவம் & WIPO வழிகாட்டல்
- உலகளாவிய இசை அமைப்புகளின் கூட்டமைப்பான CISAC அமைப்பில் இலங்கை இதுவரை அங்கத்துவம் பெறாததால், சமூக வலைத்தளங்கள் மற்றும் சர்வதேச அளவில் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை அந்நியச் செலாவணி இழக்கப்பட்டது.
- WIPO (உலக அறிவுசார் சொத்து அமைப்பு) மற்றும் CISAC வழங்கிய சர்வதேச செயல் திட்டத்தின் (Action Plan) ஒரு பகுதியாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
- ACPOSL அமைப்பானது தன்னிச்சையாகச் செயல்படவில்லை; இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் (NIPO) முழுமையான தணிக்கை மற்றும் மேற்பார்வையின் கீழேயே அனைத்து நிதிகளும் செயற்பாடுகளும் இயங்குகின்றன.
3. தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களுக்கான உரிமம்
- சிங்களப் பாடல்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ், இந்தி அல்லது ஆங்கிலப் பாடல்களை இசைப்போம் என்று சிலர் கூறுவது தவறானது.
- இந்தியாவின் IPRS (Indian Performing Right Society) அமைப்புடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டங்களின்படி, வணிக ரீதியாக இலங்கையில் இசைக்கப்படும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களுக்கும் உரிமம் (License) பெறுவது கட்டாயமாக்கப்படும்.
4. திருமணங்கள் மற்றும் தனிநபர் விருந்துகளுக்கான உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
- சாதாரண வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கோ அல்லது தெருவோரச் சிறு கடைகளுக்கோ இந்தக் கட்டணம் பொருந்தாது; வணிக ரீதியான மண்டபங்கள் மற்றும் வளாகங்களுக்கே இது பொருந்தும்.
- திருமண நிகழ்வுகள் மற்றும் தனிநபர் விருந்துகளுக்கு (Birthday Parties போன்றவை) விதிக்கப்பட்ட உரிமக் கட்டணம் குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, Event Management Association மற்றும் DJ Association ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- இந்த உரிமக் கட்டண முறையை மாற்றியமைப்பது அல்லது நீக்குவது குறித்து வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்தில் (General Assembly) 2/3 பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் மூலமே இறுதி முடிவு எடுக்க முடியும்.
- அதுவரை, திருமணங்கள் மற்றும் தனிநபர் விருந்துகளுக்கான உரிமம் பெறும் முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
5. DJ கலைஞர்களுக்கான உரிமம் தற்காலிகமாக நிறுத்தம்
- DJ கலைஞர்கள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், DJ கலைஞர்களுக்கான தனிப்பட்ட உரிம முறையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
6. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் அவதூறுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை
- ACPOSL அமைப்பின் பணிப்பாளர் சபை மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.
- இது அரசு கண்காணிப்பில் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பாகும். ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஏற்கனவே சிலருக்கு வழக்கறிஞர் மூலமாக அறிவித்தல் (Letters of Demand) அனுப்பப்பட்டுள்ளது.
- நியாயமான மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்கத் தயாராக உள்ள போதிலும், ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் கருத்து
திருமணங்கள் அல்லது விடுதிகளில் பாடல்களைப் பாடுவதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற எந்தவொரு நடைமுறையும் இல்லை. பணம் செலுத்தாமல் திருமணங்களில் பாடல்களைப் பாட முடியாது என முகநூலில் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை” எனத் தெளிவுபடுத்தினார்.
டிக்கெட்டுகளை விற்பனை செய்து வர்த்தக ரீதியான இலாபத்திற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்போது மட்டுமே, அதில் இசைக்கப்படும் பாடல்களின் படைப்பாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்குரிய இழப்பீடு வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி
இவ்வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் ( ACPOSL ) அமைப்பானது அரசாங்கத்தின் வர்த்தமானிப் பத்திரிகையில் அரச சார்பற்ற அறிவிப்பாகத் தங்கள் உரிமக் கட்டண அறிவிப்பை வெளியிட்டதால், அது அரசாங்கத்தின் சட்டப்பூர்வ வர்த்தமானி என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பாடலுக்கு ரூ. 100,000 வரை அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உணவகங்கள், திருமண மண்டபங்கள், பேருந்துகள் மற்றும் ஹோட்டல்களில் இந்த இசை உரிமம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இதில் அரசாங்கத்தின் தலையீடு என்ன? என ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, இந்த அமைச்சரவை ஊடகச் சந்திப்பிற்கு வரும் ஊடகவியலாளர்களாகிய நீங்கள் ஒரு சுயாதீன சங்கத்தை அமைத்து, இங்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவெடுப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது யாராவது எங்களிடம் வந்து இது அநீதி என முறையிட்டால், எங்களால் மத்தியஸ்தம் மட்டுமே செய்ய முடியும். ஏனெனில், இது அரசாங்கத்தின் செயல் அல்ல; உறுப்பினர்களாகிய நீங்கள் தாமாக அமைத்துக்கொண்ட சங்கத்தின் முடிவு.
இந்த உரிமக் கட்டணத்திற்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசாங்கம் விதித்த வரியோ கட்டணமோ அல்ல.தற்போது இக்கட்டண வசூல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அச்சங்கத்தின் பொதுக் கூட்டம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் (NIPO) மூலம் கலைஞர்களுக்கு இடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து நியாயமான தீர்வை எட்ட அரசாங்கம் உதவ மட்டுமே முடியும்.
நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நகர சபைகளோ அல்லது பொலிஸாரோ ACPOSL அமைப்பின் அனுமதியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.அவ்வாறு ஏதேனும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயப்படுத்தினால் அது குறித்து அரசாங்கம் ஆராயும்.
அரசாங்கம் எந்த வரிகளையும் விதிக்கவில்லை; பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி, இசை ரசிகர்களுக்குப் பாதகமில்லாத வகையில் சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



