
INTRO :
100 நவீன வாகனங்கள் சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்கு ஜப்பான் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “சுவ செரிய அவசர ஊர்தி சேவைக்கு நவீன வாகனங்கள் 100 ஜப்பான் அரசிடம் இருந்து.” என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (28.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்காக ஜப்பானினால் இந்நாட்டுக்கு 100 நவீன அம்புலன்ஸ் வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
மேலும், அத்தகையதொரு நன்கொடை இந்நாட்டுக்குக் கிடைத்திருந்தால், அது குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நாம் மேற்கொண்ட ஆய்வின்போது, அத்தகையதொரு நன்கொடை தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ நம்பகமான ஆதாரமும் வெளியாகியிருக்கவில்லை என்பது காணக்கிடைத்தது.
அத்துடன், சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்நாட்டுக்கு 100 அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கான எந்தவொரு தயார்படுத்தலும் ஜப்பானிடம் இருப்பதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.
இந்நாட்டு சுகாதாரத் துறைக்குக் கிடைக்கும் அனைத்து அம்புலன்ஸ் நன்கொடைகளும் கேள்விப்பத்திர (Tender) நடைமுறைகளும் சுகாதார அமைச்சின் கீழேயே பதிவு செய்யப்படுகின்றன.
நாம் மேற்கொண்ட சோதனையில், அத்தகைய எந்தவொரு கேள்விப்பத்திரக் கோரல் தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை.
இந்தியாவிலிருந்து 100 அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கான தயார்படுத்தல்
சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்கு 100 அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2026 ஜூலை 31 அன்று சுவ செரிய அம்புலன்ஸ் சேவையின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய உயர்ஸ்தானிகரின் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவுள்ள மேலும் 100 அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் டாடா அறக்கட்டளை ஊடாக கிடைக்கவுள்ள 50 அம்புலன்ஸ் வண்டிகளுடன் சுவ செரிய அம்புலன்ஸ் சேவையை 470 வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த அம்புலன்ஸ் வண்டிகள் இதுவரை இந்நாட்டை வந்தடையவில்லை எனவும், அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1990 சுவ செரிய தலைவர் நிரோஷன் ரத்நாயக்க
நாம் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், 1990 சுவ செரிய அறக்கட்டளையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிரோஷன் ரத்நாயக்க அவர்கள், ஜப்பானிலிருந்து இலங்கையின் சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்காக 100 அம்புலன்ஸ் வண்டிகள் கிடைத்துள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்தார்.
ஜப்பானிலிருந்து இலங்கைக்கு சுவ செரிய அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவோ, வழங்குவதற்கான தயார்படுத்தல்களோ அல்லது உடன்பாடுகளோ இல்லை என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்திய அரசாங்கத்திடமிருந்து சுவ செரிய சேவைக்காக 100 அம்புலன்ஸ் வண்டிகளையும், டாடா அறக்கட்டளை ஊடாக 50 அம்புலன்ஸ் வண்டிகளையும் வழங்குவதற்கான தயார்படுத்தல்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த அம்புலன்ஸ் வண்டிகள் அடுத்த ஆண்டு அளவில் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 முதல் சுகாதார அமைச்சு, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) இணைந்து முன்னெடுக்கும் சுகாதார சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 45 அம்புலன்ஸ் வண்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆயினும் ஆரம்பம் முதல் இதுவரையில் சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்காக அம்புலன்ஸ் வண்டிகளை நன்கொடையாக வழங்கியது இந்திய அரசாங்கம் மட்டுமே எனவும் அவர் தெரிவித்தார். தற்போது சுவ செரிய அம்புலன்ஸ் சேவையில் 319 அம்புலன்ஸ் வண்டிகள் களப்பணியில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளி
சுவ செரிய அறக்கட்டளைக்காக ஜப்பானிலிருந்து இந்நாட்டுக்கு 100 அம்புலன்ஸ் வண்டிகள் கிடைத்துள்ளதாகப் பகிரப்பட்ட காணொளியில் அம்புலன்ஸ் வண்டிகள் பயணிக்கும் காட்சிகளும் அடங்கியிருந்தன.
அக்காணொளி முற்றிலும் இயல்பற்ற தன்மையைக் கொண்டிருந்தபோதிலும், சில பயனர்கள் அக்காட்சிகளை உண்மையான காட்சிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.
ஜப்பானிலிருந்து இந்நாட்டுக்கு அத்தகைய அம்புலன்ஸ் வண்டிகள் எதுவும் வழங்கப்படாததால், அக்காணொளியில் காணப்படும் காட்சிகளை நாம் சில செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவிகள் (AI detection tools) ஊடாக ஆய்வு செய்தோம். அதில், குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.


சுவ செரிய அம்புலன்ஸ் சேவை
2016 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் டாடா சன்ஸ் (தனியார்) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 297 அம்புலன்ஸ் வண்டிகளைக் கொண்டு “1990 சுவ செரிய அறக்கட்டளை” ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, முன்-மருத்துவமனை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25 அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 322 அம்புலன்ஸ் வண்டிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டன. தற்போது அந்த 322 அம்புலன்ஸ்களில் 319 சேவையில் உள்ளன.
சுவ செரிய அறக்கட்டளையின் இலக்கின்படி, 450 அம்புலன்ஸ் வண்டிகளும் 25 மேலதிக (காப்பு) அம்புலன்ஸ் வண்டிகளும் உடனடியாக சேவையாற்றத் தேவைப்படுவதுடன், தற்போது சுமார் 150 அம்புலன்ஸ் வண்டிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக 100 அம்புலன்ஸ் வண்டிகளையும், டாடா சன்ஸ் (தனியார்) நிறுவனம் இலவச நன்கொடையாக 50 அம்புலன்ஸ் வண்டிகளையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு முதல் ஆசிய அபிவிருத்தி வங்கி நன்கொடையாக 45 அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள அம்புலன்ஸ் வண்டிகளை “1990 சுவ செரிய அறக்கட்டளை”க்கு விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1990.lk | cabinetoffice.gov.lk
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 100 நவீன வாகனங்கள் சுவ செரிய அம்புலன்ஸ் சேவைக்கு ஜப்பான் வழங்கியதாக பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



