
INTRO :
மாத்தளையில் மகளைச் சேர்க்க சென்ற தந்தையிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற தந்தையிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு – மாத்தளை” என இம் மாதம் 17 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (17.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காக வந்த தந்தையிடம், அப்பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாகவும், அது தொடர்பாக அத்தந்தையினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட எந்தவொரு தகவலும் பிரதான ஊடகங்களில் வெளியாகி இருக்கவில்லை.
இதன் காரணமாக, நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக விசாரித்து உண்மைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
மாத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் போது, இவ்வாறான சம்பவம் தொடர்பில் எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை என மாத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அத்தகைய முறைப்பாடோ அல்லது இச்சம்பவம் உண்மை என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலோ இல்லை என அவர் எமக்கு தெரிவித்தார்.
மத்திய மாகாண கல்வித் திணைக்களம்
இது தொடர்பாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திடம் நாம் வினவிய போது, அதன் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடமும் இது குறித்து உறுதிப்படுத்திய பின்னர் எமக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அத்தகைய எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை எனத் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளின் அடிப்படையில், மாத்தளை வலயக் கல்வி அலுவலகம், அதிபர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிடம் இவ்வாறான சம்பவம் ஏதும் பதிவாகியுள்ளதா அல்லது முறைப்பாடு கிடைத்துள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் ஒருவரால் மாணவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று மாத்தளை, அக்குரம்பொட பகுதியிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் பதிவாகியுள்ளது.
மாத்தளை அக்குரம்பொட பகுதியிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும் (14 வயதுடைய) மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், அப்பாடசாலையின் அதிபர் 2026 மார்ச் 31 அன்று மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான ஊடக அறிக்கைகள் Link 1 | Link 2.
மஹவெல பொலிஸ் நிலையம்
இது தொடர்பாக நாம் மஹவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் ஒருவர் 14 வயது மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக அந்த அதிபர் மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், பெண் அதிபர் ஒருவர் தந்தையிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக சமூக வலைத்தளப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என அவரும் தெரிவித்தார்.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
இது தொடர்பில் அப்பிரதேசத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களிடமும் வினவப்பட்டதுடன், மாத்தளை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.
சில மாதங்களுக்கு முன்னர் அதிபர் ஒருவர் 14 வயதுடைய மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவமும், அதற்கமைய அந்த அதிபர் மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
இலங்கை தொழில்முறை அதிபர்கள் சங்கம்
குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி ஊடகமொன்று இலங்கை தொழில்முறை அதிபர்கள் சங்கத்தின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர் குறித்த தகவல் முற்றிலும் போலியானது என தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த சங்கத்தினால் மாத்தளை மாவட்டத்தில் உள்ள 13 பொலிஸ் நிலையங்களிலும் இவ்வாறானதொரு புகார் கிடைக்கவில்லை என அவர் அதில் தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மாத்தளையில் மகளைச் சேர்க்க சென்ற தந்தையிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



