
INTRO
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் வளிமண்டல திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனுடன் ஆறு பெருக்கெடுக்கும் நிலமைகளும் உருவாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் நாவலப்பிட்டியவில் கடும் வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிகின்றது.
எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் நாவலப்பிட்டியவில் கனமழை மற்றும் வெள்ளம் 🇱🇰
📍 இடம்: நாவலப்பிட்டிய, பஸ்பாகே கோரளை, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம், இலங்கை
📅 திகதி: 20 செப்டெம்பர் 2026
⏰ நேரம்: அதிகாலை முதல்
செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் நாவலப்பிட்டிய பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடுமையான நீரோட்டமும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
ஹங்ரன் ஓயாவின் நீரோட்டம் வேகமாக அதிகரித்து கீழ்நோக்கி பெருக்கெடுத்து ஓடியதுடன், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
கித்துல்கோட்டை, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தர ஓவிட்ட உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவியதன் காரணமாக சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தனர். பொதுமக்களும் வாகன சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இலங்கையின் வானிலை அதிகாரிகளும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு நேற்று (2026.09.21) இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாட்டில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக நாவலப்பிட்டியவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது, உண்மையில் கடும் மழை மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக நாவலப்பிட்டிய பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் நேற்றைய தினம் (20) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.Link
பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கித்துல்கொட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தர ஓவிட்ட உள்ளிட்ட பகுதிகளே வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.Link
இருப்பினும் நாவலப்பிட்டியவில் வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட இந்த காணொளியை பிரதான ஊடகங்களில் காணமுடியவில்லை.
மேலும் நாம் இந்த காணொளியை நன்கு அவதானித்த போது மூன்று வெவ்வேறு காணொளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமையை அறிய முடிந்தது.
முதலாவது காணொளி
குறித்த காணொளியில் முதலாவதாக இணைக்கப்பட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, அந்த காணொளியானது கடந்த ஆகஸ்ட் மாதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி என்பதனை அறிய முடிந்தது.

மேலும் இந்த காணொளியும் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக நாவலப்பிட்டியவில் ஏற்பட்ட வெள்ள நிலையின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனையும் அறியமுடிந்தது. மேலும் அப்போது இந்த காணொளியை பல பேஸ்புக் பயனர்கள் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது. Link | Link | Link
அதனடிப்படையில் பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட காணொளியானது நாவலப்பிட்டியவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியாக இருந்தாலும் அது கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தன் போது எடுக்கப்பட்ட பழைய காணொளி என்பது உறுதியானது.
இரண்டாவது காணொளி
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இரண்டாவதாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இந்த காணொளியின் பின்னணியில் வேறுமொழியில் கதைப்பதனையும் அவதானிக்க முடிந்தது. ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, 2026 செப்டெம்பர் 19, சனிக்கிழமை, ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் கடந்த சனிக்கிழமை (2026.09.19) ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகரான டெகுசிகல்பாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்படத்தக்கது. Link | Link
மூன்றாவது காணொளி
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இணைக்கப்பட்டிருந்த மூன்றாவது காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இந்த காணொளியானது நேற்று (2026.09.20) பெய்த கடும் மழை காரணமான ஹங்ரன் ஓயா பெருக்கெடுத்து ஓடும் காட்சி என்பதுவும் கண்டறியப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த காணொளியில் இணைக்கப்பட்ட இறுதி காணொளி மாத்திரம் உண்மையில் நேற்று (20) பெய்த கடும் மழைக் காரணமாக நாவலப்பிட்டி ஹங்ரன் ஓயா பெருக்கெடுத்து ஓடும் காட்சி என்பது உறுதியானது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பிலும் நாவலப்பிட்டியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பிலும் நாம் நாவலப்பிட்டி பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவிய போது, தொடர்ந்து பெய்த கடும் மழைக் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக நாவலப்பிட்டியின் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரித்தமை உண்மை எனினும் மேற்குறிப்பிட்ட காணொளியின் இரண்டு காட்சிகள் நேற்றைய வெள்ளக் காட்சிகளுடன் தொடர்புடையவை அல்ல என்பதுடன், இறுதிக்காணொளி ஹங்ரன் ஓயா பெருக்கெடுத்து ஓடும் காட்சி என்பதனையும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
இலங்கையில் தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலை
வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இந்த தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை கிங் கங்கை மற்றும் களு கங்கையின் குடா கங்கை துணை நீரேந்துப் பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம், இந்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக உள்புற வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Link | Link | Link
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நாவலப்பிட்டியில் வெள்ளம் என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியில் இணைக்கப்பட்ட முதலாவது காணொளி ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளி என்பதுடன், அதில் இணைக்கப்பட்ட இரண்டாவது காணொளி கடந்த சனிக்கிழமை (2026.09.19) ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகரான டெகுசிகல்பாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
அதேபோன்று இந்த காணொளியில் மூன்றாவதாக இணைக்கப்பட்ட காணொளி மாத்திரமே உண்மையில் நேற்றைய தினம் (2026.09.20) பெய்த கடும் மழைக் காரணமாக நாவலப்பிட்டி ஹங்ரன் ஓயா பெருக்கெடுத்தும் ஊடும் காட்சி என்பதுவும் உறுதியானது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



