INTRO :
பாலஸ்தீனத்துக்கு விடுதலைவேண்டி பாரிஸில் நடந்துவரும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01
சமூகவலைத்தளங்களில் “ பாலஸ்தீனத்துக்கு விடுதலைவேண்டி பாரீசில் நடந்துவரும் இஸ்லாமிய மாணவர்களின் அமைதியான அரசியல் போராட்டம்!நம்புவீர்களா?💥👈🤣🤣🤣
சரவணா இது என்ன கொடுமை சரவணா,பாரீசு பொலிசாருக்குவந்த இதுபோன்ற அவலம் உலகின் வேறு எந்தவொரு பொலிசாருக்கும் வந்துவிடக்கூடாது.🤣🤣
போராட்டத்தை அடக்கப்போன பாரீசு பொலிசாரை போராட்டக்காறர்கள் அடக்கி,அந்த பொலிசாரை அவர்கள் கொண்டுவந்த பாதுகாப்பு கவசங்களை அவர்களின் உயிர்களை காக்கும் கூரையாக்கி,பொலிசாரே போராட்டக்காறர்களால் பாய்ந்து பாய்ந்து தாக்கப்படுகிறார்கள் எனின், பாலஸ்தீன நலன்விரும்மிகளே,பாலஸ்தீனத்திற்காக கண்ணீர்வடிக்கும் தமிழ் குஞ்சுகளே என்னசெய்யப்போகிறீர்கள் ?…..
இதுதான் ஜனநாயகமா?
ஆம் என்றால் நானும் உங்களை ஆதரிக்கிறேன், free free palastine,free palastine அடித்து கொழுத்துங்கள் ஐரோப்பாவை,free free palastine,free free palastine இந்தமாதிரியான ஜனநாயக போராட்டங்கள் வெற்றிபெற எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ” என இம் மாதம் 09 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (09.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02
சமூகவலைத்தளங்களில் “ 🇫🇷 பிரான்சில் மாணவர் போராட்டம் தீவிரம் — நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் மூடல்
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் பல பகுதிகளுக்கு பரவி, சில இடங்களில் வன்முறை மற்றும் காவல்துறையுடனான மோதல்களாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறை, அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகள், போதிய கல்வி வசதிகள் இல்லாமை மற்றும் பள்ளிக் கட்டிடங்களின் மோசமான நிலை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில பள்ளிகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
🇫🇷 பிரான்சில் மாணவர் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக கவனிக்கப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
#பிரான்ஸ் #மாணவர்போராட்டம் #France #StudentProtest #FranceProtests #Education #PuvisarParvai #புவிசார்பார்வை ” என இம் மாதம் 05 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (05.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim 01
நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்தபோது, இது கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் மீதான பொதுமக்களின் கோபத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 21 வயதான டெலிவரி ஓட்டுநர் அஃபான் குர்னியாவனை, அந்நாட்டின் உயர்மட்ட துணை ராணுவக் காவல் படையைச் சேர்ந்த ஒரு குழு வாகனத்தால் ஏற்றிச் செல்லும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறின.
அதன்பின், இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜகார்த்தாவிலிருந்து ஜாவாவில் உள்ள யோக்யகார்த்தா, பண்டுங், செமராங் மற்றும் சுரபாயா, மற்றும் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட கட்டிடம்
நாம் ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட கட்டிடம் எங்கு அமைந்துள்ளமை தொடர்பாக கூகுள் மேப் வசதியுடன் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது வடக்கு சுமத்ரா பகுதியில் இந்த காணொளியில் காணப்பட்ட பகுதியினை ஒத்த பகுதி எமது தேடலில் கண்டறியப்பட்டது.

ஆகவே இந்த தேடலின் மூலம் இந்த போராட்டம் இந்தோனேசியாவில் நடந்தமை உறுதியாகின்றது.
இதேபோல் கடந்த வருடம் நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் என இந்த காணொளி அக்காலக்கட்டத்தில் பகிரப்பட்டிருந்தமை எமது உண்மை கண்டறியும் தேடலின் மூலம் ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆய்வறிக்கையினை வாசிக்க
Claim 02
குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி எக்ஸ் தளத்தில் முதலில் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த எக்ஸ் பதிவில் “பாரிஸ் நகரின் மையத்தில் குழப்பம், வாகனங்கள் கவிழ்க்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மோதல்கள் தொடர்கின்றன.” என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மேலும் ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அணி திரண்ட ஆர்ப்பாட்டக்கார்களால் குறித்த சேதம் விளைவிக்கப்பட்டதாக வெளியாகியிருந்த செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன. BBC News | Reuters
ஆகவே எமது ஆய்விற்கு அமைய இது பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவம் என கண்டறியப்பட்டது.
பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை காணக்கிடைத்தது. Aljazeera | Euro News
கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. BBC News
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி பாலஸ்தீனத்துக்கு விடுதலைவேண்டி பாரிஸில் நடந்துவரும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டம் என பகிரப்படும் காணொளி தவறானவை என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


