Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பாம்பு கடித்தவுடன் 108 அவசர எண்ணிற்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து தடுப்பூசி வழங்கப்படுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-22
    8 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    உலகில் பாம்புக்கடி அதிகம் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. நாடாளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரே ஆண்டில் 80,000க்கும் அதிகமான பாம்புக்கடிச் சம்பவங்களும் சுமார் 400 மரணங்களும் பதிவானதாக Al Jazeera செய்தி வெளியிட்டிருந்தது.  இந்நிலையில், பாம்ப

    உலகில் பாம்புக்கடி அதிகம் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. நாடாளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரே ஆண்டில் 80,000க்கும் அதிகமான பாம்புக்கடிச் சம்பவங்களும் சுமார் 400 மரணங்களும் பதிவானதாக Al Jazeera செய்தி வெளியிட்டிருந்தது. 

    இந்நிலையில், பாம்பு கடித்தால் 108 என்ற அவசர எண்ணிற்கு அழைத்தால் போதும், அம்பியூலன்ஸ் வீட்டுக்கே வந்து விஷமுறிவு ஊசி செலுத்தும் என்ற தகவல் WhatsApp மற்றும் Facebook ஊடாக வேகமாகப் பரவியது. உண்மையில் இந்தத் தகவல் இந்தியாவை மையமாகக் கொண்டு பரவியதோடு, இது இலங்கை சிங்கள மக்களிடையே பகிரப்பட்டிருந்தமையும் அவதானிக்க கிடைத்தது.

    தகவலின் விவரம் (Social Media Claim):

    சமூகவலைத்தளங்களில், புகைப்படத்திலுள்ள ஊசி மருந்து 108 அம்பியூலன்ஸ் சேவையூடாகக் கிடைப்பதாகவும், பாம்பு கடித்தால் 108 இற்கு அழைக்குமாறும் கூறப்பட்டிருந்தது. அம்பியூலன்ஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே வந்து தேவையான ஊசியை அல்லது முதலுதவியை வழங்கும் என்றும், அவசர நேரத்தில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றக்கூடும் என்பதால் இத்தகவலை அனைத்துக் குழுக்களிலும் பகிருமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

    சிங்களக் குறிப்பில், பாம்பு கடித்தால் 108 இற்கு அழைத்து அம்பியூலன்ஸுக்கு அறிவிக்குமாறும், அந்த அம்பியூலன்ஸில் இந்த ஊசி உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்தத் தகவல் Snake Venom Antiserum எனும் விஷமுறிவு மருந்தின் புகைப்படத்துடனும் பகிரப்பட்டது.

    Facebook Link

    இதே தகவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு Facebook பக்கங்களிலும் குழுக்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது. “இது பாம்பு கடித்தால் செலுத்தப்படும் ஊசி ஆகும்” என ஆரம்பிக்கும் இப்பதிவுகள், 108 அம்பியூலன்ஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே வந்து ஊசி செலுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறித்த தகவல்கள், கடந்த 2026 ஜூலை மாதம் முதல் பகிரப்பட்டு வந்துள்ளன. ஒக்டோபர் 5ஆம் திகதி பகிரப்பட்ட ஒரு பதிவு மாத்திரம் 135,000க்கும் அதிகமான பார்வைகளையும் 4,100க்கும் அதிகமான பகிர்வுகளையும் பெற்றிருந்தது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்த கணக்குகளிலிருந்து பகிரப்பட்டவை என்றாலும், இலங்கைத் தமிழ் வாசகர்களின் சமூக ஊடகப் பக்கங்களையும் அவை சென்றடைந்தன.

    Facebook Link | Archived Link 

    Facebook Link | Archived Link 

    Facebook Link | Archived Link 

    Facebook Link | Archived Link 

    Facebook Link | Archived Link 

    எனவே, இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இலங்கையின் உத்தியோகபூர்வ அவசர அம்பியூலன்ஸ் இலக்கம் 1990; 108 அல்ல

    108 இற்கு அழைக்குமாறு கூறும் இந்த அறிவுறுத்தல் இலங்கைக்குப் பொருந்தாது. ஏனெனில், 108 இலங்கையின் பிரதான அல்லது உத்தியோகபூர்வ அவசர இலக்கம் அல்ல. இலங்கையின் உத்தியோகபூர்வ அவசர அம்பியூலன்ஸ் சேவை 1990 சுவசெரிய ஆகும். அவசர அம்பியூலன்ஸ் தேவைப்படும்போது அழைக்க வேண்டிய இலக்கம் 1990 என அதன் உத்தியோகபூர்வ இணையதளம் குறிப்பிடுகின்றது.

    இது வைத்தியசாலைக்கு முந்தைய அவசர சிகிச்சைச் சேவையாகும். தமது அம்பியூலன்ஸ்களில் விஷமுறிவு மருந்து கொண்டுசெல்லப்படுவதாகவோ, அதனை நோயாளர்களுக்கு வீட்டில் வைத்து வழங்குவதாகவோ 1990 சுவசெரிய இணையதளத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    1990 சுவசெரிய சேவை, இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் 2016ஆம் ஆண்டு மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பிலிருந்தும் 1990 இற்குக் கட்டணமின்றி அழைக்க முடியும்.

    108 இந்தியாவின் அவசர அம்பியூலன்ஸ் இலக்கம்

    மேலதிக ஆய்வில், இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர அம்பியூலன்ஸ் இலக்கமாகப் பயன்படுத்தப்படுவது உறுதியானது. மகாராஷ்டிராவில் 108 சேவை அம்மாநிலத்தின் அவசர மருத்துவச் சேவைகளின் கீழ் இயங்குவதுடன், பாம்புக்கடி உள்ளிட்ட மருத்துவ அவசரநிலைகளுக்குச் சேவை வழங்குவதாக மகாராஷ்டிர பொதுச் சுகாதாரத் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடுகின்றது. மேலதிக விபரங்கள் இங்கே.

    இதே 108 தகவல் இந்தியாவிலும் சமூக ஊடகங்களில் பரவியதாக குறித்த தகவல் தவறானவை என இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. 108 இற்கு அழைத்தால் வீட்டுக்கே விஷமுறிவு மருந்து வரும் என்ற கூற்று தவறானது என இந்தியச் சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி அவ்வறிக்கைகள் குறிப்பிட்டன. பாம்புக்கடியின் போது, நோயாளருக்கு விரைவாக முதலுதவி வழங்கி, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதே அம்பியூலன்ஸ் சேவையின் பணி எனவும் அவை தெரிவித்தன. மேலதிக தகவல்களை பெற இங்கே.

    வீட்டில் வைத்து விஷமுறிவு மருந்து வழங்குவதில்லை என சுவசெரிய உறுதிப்படுத்தியது

    108 இலங்கையின் அம்பியூலன்ஸ் இலக்கம் இல்லையென்றாலும், பாம்புக்கடியின் பின்னர் 1990 சேவை இத்தகைய சிகிச்சையை வழங்குகின்றதா என சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையிடம் நாம் வினவினோம். விலங்குக்கடியால் அவசரநிலை ஏற்படும்போது, சம்பவ இடத்துக்கு அம்பியூலன்ஸ் அனுப்பப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எந்த நோயாளராக இருந்தாலும், குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று நோயாளரைப் பரிசோதித்து, வைத்தியர் ஒருவரைத் தொடர்புகொண்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார். சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது போன்ற எந்தவொரு ஊசியையும் தமது சேவை வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    புகைப்படத்திலுள்ள விஷமுறிவு மருந்து வைத்தியசாலைப் பயன்பாட்டுக்கான இந்தியத் தயாரிப்பு

    புகைப்படத்திலுள்ள மருந்து பெட்டி மற்றும் போத்தலில் VINS Bioproducts Limited நிறுவனத்தின் பெயரும் இலச்சினையும் காணப்படுவதுடன், இந்த மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றது. இத்தகைய மருந்துகளில் பாம்பு விஷத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட பிறபொருளெதிரித் துண்டுகள் (antibody fragments) அடங்கியுள்ளன. அவை இரத்தத்திலுள்ள விஷக் கூறுகளுடன் இணைந்து, அவற்றின் நச்சு விளைவுகளைச் செயலிழக்கச் செய்ய உதவுகின்றன. பாம்புக்கடியின் பின்னர் ஏற்படும் இரத்தம் உறைதல் கோளாறுகள், தசைச் செயலிழப்பு போன்ற கடுமையான விஷ விளைவுகளைக் கட்டுப்படுத்த இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் பொதுவாகக் காணப்படும் நாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன் போன்ற விஷப் பாம்புகளின் கடியால் ஏற்படும் விஷப் பாதிப்புக்கு (envenoming) சிகிச்சையளிக்க இது பயன்படுகின்றது.

    எனினும், இலங்கையிலுள்ள அனைத்து விஷப் பாம்புகளுக்கும் இது பலனளிப்பதில்லை. இந்தியப் பல்வலு (polyvalent) விஷமுறிவு மருந்து குறிப்பிட்ட சில பாம்பு விஷங்களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டது என இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) பாம்புக்கடி முகாமைத்துவ வழிகாட்டல்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, மூக்குக்கொம்பு விரியன் (Hump-nosed pit viper) கடிக்குப் பின்னர் விஷமுறிவு மருந்து வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

    இம்மருந்து நாளம் ஊடாகச் செலுத்தப்படுவதுடன், ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இது வைத்தியசாலையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் மாத்திரம் வழங்கப்பட வேண்டிய வீரியம்மிக்க மருந்தாகும். SLMA வழிகாட்டல்களும் இது மருத்துவ மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றன. இம்மருந்தைப் பெற்ற பின்னர் சிலருக்குக் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுவதால், அவற்றை உடனடியாக அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கக்கூடிய பணியாளர்கள் உள்ள இடத்திலேயே இதனை வழங்க வேண்டும். அத்துடன், பாம்புக்கடிக்கு உள்ளான அனைவருக்கும் விஷமுறிவு மருந்து தேவைப்படுவதில்லை. நோயாளரின் அறிகுறிகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் வைத்தியரே இதனைத் தீர்மானிப்பார்.

    இலங்கையில் வீட்டுக்கு வந்து விஷமுறிவு மருந்து வழங்கும் முறைமை இல்லை என SLMA பாம்புக்கடி நிபுணர் தெரிவிப்பு

    இந்த WhatsApp தகவல் குறித்து, இலங்கை மருத்துவ சங்கத்தின் பாம்புக்கடி தொடர்பான நிபுணர் குழுவின் செயலாளரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் நாமல் ரத்நாயக்கவிடம் நாம் வினவினோம். பாம்புக்கடியின் பின்னர் வீட்டுக்கு அம்பியூலன்ஸ் வந்து விஷமுறிவு மருந்து வழங்கும் எந்தவொரு முறைமையும் இலங்கையில் இல்லை என அவர் தெரிவித்தார். ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படக்கூடும் என்பதால், பாம்புக்கடிக்கு உள்ளானவர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற வேண்டும் எனவும், தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு மாத்திரமே அனுமதி உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.

    தகவலில் காட்டப்பட்டுள்ள Snake Venom Antiserum I.P. மருந்து குறித்தும் நாம் அவரிடம் கேட்டோம். இது நான்கு பாம்பு இனங்களின் விஷத்துக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், எப்போதும் வைத்தியசாலைக்குள்ளேயே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பாம்புக்கடிக்கு உள்ளானவரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

    விஷமுறிவு மருந்தை வைத்தியசாலையில் மாத்திரமே பாதுகாப்பாக வழங்க முடியும்

    இந்த அபாயம் எவ்வளவு உண்மையானது என்பதை SLMA இன் தேசிய வழிகாட்டல்கள் காட்டுகின்றன. இந்தியப் பல்வலு விஷமுறிவு மருந்தைப் பெற்ற நோயாளர்களில் 81% வரையானோருக்கு எதிர்வினை ஏற்பட்டதாகவும், 43% வரையானோருக்குக் கடுமையான எதிர்வினை ஏற்பட்டதாகவும் கண்டறிந்த ஆய்வுகளை அவை மேற்கோள்காட்டுகின்றன (SLMA வழிகாட்டல்கள்).

    இதன் காரணமாக, முதலாவது விஷமுறிவு மருந்து உட்செலுத்தலுக்குச் சற்று முன்னர் தோலுக்குக் கீழ் சிறிய அளவு அட்ரினலின் வழங்குமாறும், திடீரென ஏற்படும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினையான anaphylaxis இற்கு உடனடியாகச் சிகிச்சையளிக்கத் தயாராக இருக்குமாறும் வழிகாட்டல்கள் வைத்தியர்களுக்கு அறிவுறுத்துகின்றன. பாம்புக்கடிக்கு உள்ளான ஒவ்வொரு நோயாளரும் மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவை குறிப்பிடுகின்றன. விஷம் இரத்தத்தைப் பாதித்துள்ளதா, விஷமுறிவு மருந்து செயற்படுகின்றதா என்பதைக் கண்டறிய, நோயாளரின் படுக்கையருகே மேற்கொள்ளப்படும் 20 நிமிட முழு இரத்த உறைதல் பரிசோதனையை (20WBCT) வைத்தியர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் வழிகாட்டல்கள் கூறுகின்றன. இவற்றில் எதனையும் நோயாளரின் வீட்டில் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியாது.

    விஷமுறிவு மருந்து சில பாம்பு இனங்களுக்கு மாத்திரமே பலனளிக்கும். நாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றின் கடியால் உடல் முழுவதும் ஏற்படும் விஷப் பாதிப்புக்கு இதனை வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன. இது வைத்தியர் ரத்நாயக்க குறிப்பிட்ட நான்கு இனங்களுடன் ஒத்துப்போகின்றது. மூக்குக்கொம்பு விரியன், பச்சை விரியன் (green pit viper), கடல் பாம்புகள் ஆகியவற்றின் கடிக்கு இது எந்தப் பயனும் அளிக்காது என வழிகாட்டல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கையில் பாம்புக்கடிச் சம்பவங்களுக்கு மூக்குக்கொம்பு விரியன் ஒரு பொதுவான காரணமாக உள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் விஷமுறிவு மருந்து அதற்குப் பலனளிப்பதில்லை என Al Jazeera செய்தி வெளியிட்டிருந்தது.

    பாம்பு கடித்தவுடன் முதலில் செய்ய வேண்டியவை

    பாம்பு கடித்தால், காயத்தைக் கழுவுவது, விஷத்தை உறிஞ்சி எடுப்பது, காயத்தை வெட்டுவது, இறுக்கமாகக் கட்டுவது அல்லது கைவைத்தியங்களைப் பயன்படுத்துவது கூடாது என, மாலபேயிலுள்ள வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் கோலித செல்லஹேவாவை மேற்கோள்காட்டி செய்தி அறிக்கையொன்று தெரிவித்திருந்தது. நோயாளரை நேரடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்வதே மருத்துவ ஆலோசனையாகும்.

    நோயாளரின் அறிகுறிகளின் அடிப்படையில் பயிற்றப்பட்ட நிபுணர்களே சிகிச்சையைத் தீர்மானிப்பதால், பாம்பைப் பிடிக்கவோ வைத்தியசாலைக்குக் கொண்டுவரவோ தேவையில்லை எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது. எந்தவொரு விஷப் பாம்புக்கடிக்கும் சிகிச்சையளிக்கத் தேவையான விஷமுறிவு மருந்து வைத்தியசாலைகளில் உள்ளதால் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அது தெரிவித்தது.

    கடிபட்ட உடற்பகுதியை முற்றாக அசையாமல் வைத்திருப்பது அத்தியாவசியம் எனவும், இறுக்கமான கட்டுகள் (tourniquets) இடுவதும் காயத்தை வெட்டுவதும் விஷத்தின் தாக்கத்தை மோசமாக்கக்கூடும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவும் வலியுறுத்தியுள்ளது (வாராந்த தொற்றுநோயியல் அறிக்கை). பாதிக்கப்பட்டவரை அமைதியாகவும் அசையாமலும் படுக்கவைத்து, கடிபட்ட கை அல்லது காலில் வீக்கம் ஏற்படுவதற்கு முன்னர் மோதிரம், வளையல், கைக்கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட்டு, 1990 இற்கு அழையுங்கள் அல்லது நேரடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.

    பாம்புக்கடியைத் தடுத்தல், சிகிச்சையை முகாமைத்துவம் செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல் ஆகியவை குறித்து SLMA இன் பாம்புக்கடி தொடர்பான நிபுணர் குழு ஆலோசனை வழங்கி வருகின்றது. அதன் செயலாளர் வைத்தியர் நாமல் ரத்நாயக்க, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு குழுவின் பங்கு, பாம்புக்கடிக்குப் பின்னர் நோயாளரைப் பராமரிக்கும் முறை, சமூகத்தில் இன்றும் நிலவும் பாம்புக்கடி தொடர்பான மூடநம்பிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கினார். அந்தக் காணொளி கீழே.

    Read in English : Snakebite Antivenom at Home by Calling 108? False, Sri Lanka Uses 1990

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page | Twitter Page | Instagram | Google News Channel | TikTok | YouTube

    Conclusion: முடிவு

    பாம்பு கடித்தால் 108 இற்கு அழைத்தால், அம்பியூலன்ஸ் நோயாளரின் வீட்டுக்கே வந்து Snake Venom Antiserum I.P. ஊசியைச் செலுத்தும் என WhatsApp மற்றும் Facebook ஊடாகப் பரவிய தகவல் தவறானது என எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    இலங்கையின் அவசர அம்பியூலன்ஸ் சேவை 1990 சுவசெரிய ஆகும். 108 என்பது இந்தியாவின் பல பிரதேசங்களில் அவசர அம்பியூலன்ஸ் சேவைகள் பயன்படுத்தும் இலக்கமாகும். பாம்புக்கடி அவசரநிலைகளுக்குச் சுவசெரிய சேவை வழங்கினாலும், நோயாளரின் வீட்டுக்குச் சென்று விஷமுறிவு மருந்து வழங்குவதில்லை என அதன் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

    பாம்புக்கடிக்கு உள்ளானவருக்கு உடனடி வைத்தியசாலைச் சிகிச்சை அவசியம் என SLMA பாம்புக்கடி நிபுணர் குழுவின் வைத்தியர் நாமல் ரத்நாயக்கவும், SLMA தேசிய வழிகாட்டல்களும் தெரிவிக்கின்றன. விஷமுறிவு மருந்து கடுமையான ஒவ்வாமை அபாயம் கொண்டது என்பதால், வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளரைப் பரிசோதித்த பின்னர், முறையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மாத்திரமே அது வழங்கப்பட வேண்டும். பாம்பு கடித்தால், பாதிக்கப்பட்டவரை அமைதியாகவும் அசையாமலும் வைத்திருந்து, தாமதமின்றி 1990 இற்கு அழையுங்கள் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.