ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் மர்ம வைரஸ் பரவுவதாகவும், இதன் காரணமாக மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

வேகமெடுக்கும் மர்ம வைரஸ்.. மீண்டும் LOCKDOWN போட்டாச்சு ! என தெரிவித்து இந்த தகவலானது கடந்த 2026.10.05 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள இர்குட்ஸ்க் (Irkutsk) நகரில் அமைந்துள்ள சைபீரியா மற்றும் தூரக் கிழக்கிற்கான பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் (Irkutsk Anti-Plague Research Institute of Siberia and the Far East) பணியாற்றிய 28 வயதுடைய டர்யா ஷிபிலோவா (Darya Shipilova) என்ற பெண் ஆய்வகப் பணியாளர், ஒக்டோபர் 2ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என பல சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அவருக்கு அடையாளம் காணப்படாத காரணத்தால் ஏற்பட்ட நிமோனியா (Pneumonia of unknown origin) இருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் பிளேக் நோயால் (Plague) உயிரிழந்தார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், அவர் பணியாற்றிய ஆய்வகத்தில் நோய்க்கிருமிகள் கசிந்ததாகவும், பரிசோதனைக் குழாய் உடைந்ததால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால், இத்தகைய ஆய்வக விபத்து இடம்பெற்றதற்கான சுயாதீன ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“மர்ம வைரஸ்” என்பது உண்மையா?
இந்த நிகழ்வின் போது எந்த வைரஸும் அடையாளம் காணப்பட்டதாக எந்தச் செய்தியிலும் இல்லை. ரஷ்ய ஊடகங்களில் வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நிமோனிக் பிளேக் என்ற நோயைக் குறிப்பிட்டன. பிளேக் என்பது வைரஸால் அல்ல, பாக்டீரியாவால் வரும் ஒரு நோய் ஆகும் .
அதேவேளை பிளேக் தான் காரணம் என்பதும் உறுதியாகவில்லை. ஆய்வகத்தில் கையாளப்படும் எந்த நோய்க்கிருமியால் அவருக்கு குறித்த நோய் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று விரிவான பரிசோதனைகளில் தெரியவந்ததாக Rospotrebnadzor தெரிவித்துள்ளது. இர்குட்ஸ்க் பகுதியில் பிளேக் பாதிப்பு பதிவாகவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்திற்கும் (WHO) அறிவித்துள்ளது. இந்த மரணத்துக்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று WHO-வின் தொற்றுநோய் முகாமை பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் கூறியதோடு, ரஷ்யா கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். Link
சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்களா?
ஆய்வகப் பணியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நடவடிக்கை முழு நகரத்திற்கும் அல்லது சைபீரியா பகுதி முழுவதற்கும் விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அல்ல என்பதுவும் சர்வதேச செய்திகளின் ஊடாக அறியமுடிகின்றது.
உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 5,000 ஆய்வகப் பரிசோதனைகளில் ஆபத்தான நோய்க்கிருமிகள் கண்டறியப்படவில்லை என ரஷ்யாவின் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாவது நபருக்கும் இதேபோன்ற நோய் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய தகவலையும் ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ரஷ்யாவில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதா?
இர்குட்ஸ்க் பகுதியில் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவிய தகவல்கள் தவறானவை என ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நலக் கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான Interfax செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இர்குட்ஸ்க் பகுதியிலும் இர்குட்ஸ்க் மற்றும் ஷெலெகோவ் (Shelekhov) நகரங்களிலும் பொதுமுடக்கத்தை அமுல்படுத்துவதற்கான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சுமார் 200 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டதை, ஒட்டுமொத்தமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதாகக் கூறுவது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது.
மீண்டும் LOCKDOWN” என்பதற்கு ஆதாரம் இல்லை
கொரோனா தொற்று காலத்தைப் போன்ற பொது முடக்கம் ரஷ்யாவில் அறிவிக்கப்பட்டதா என நாம் ஆராய்ந்த போது எந்த நம்பகமான செய்தியிலும் அது தொடர்பில் அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. மேலும் “தொற்றுநோய் அபாயம் ஏதுமில்லை” என்றும், ஆய்வகம் நோய்க்கிருமிகளைக் கையாளும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியதாகவும் ரஷ்ய சுகாதார அமைப்பு கூறியுள்ளது
உலக சுகாதார அமைப்பு என்ன தெரிவித்துள்ளது?
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களைப் பெறுவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) ரஷ்ய அதிகாரிகளிடம் விளக்கங்களைக் கோரியதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாவது ஆய்வகப் பணியாளர் ஒருவருக்கும் அடையாளம் காணப்படாத காரணத்தால் நிமோனியா ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களைச் சரிபார்க்குமாறும் WHO கேட்டிருந்தது. பின்னர், அத்தகைய இரண்டாவது சம்பவம் தொடர்பான தகவலை ரஷ்ய அதிகாரிகள் மறுத்தனர்.
இதனால், இந்தச் சம்பவம் தொடர்பான சில விவரங்கள் குறித்து மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டாலும், ரஷ்யாவில் புதிய தொற்றுநோய் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவோ, அதனால் நாடு அல்லது சைபீரியா முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவோ முடிவெடுக்க முடியாது.Link
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் காரணம் கண்டறிப்படாத நிமோனியாவால் உயிரிழந்தமையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட தகவலும் உண்மை எனினும், அவர் பிளேக் நோயால் உயிரிழந்தார் என்பதற்கோ, ஆய்வகத்தில் நோய்க்கிருமிக் கசிவு ஏற்பட்டது என்பதற்கோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதேபோன்று, சைபீரியா பகுதியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பகிரப்படும் தகவலும் ரஷ்ய சுகாதார அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, “ரஷ்யாவில் மர்ம வைரஸ் பரவுவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறாக வழிநடத்தக்கூடியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பு: ரஷ்யா இதுவரை மேலதிக வெளிப்படையான தகவல்களை வழங்கவில்லை என்பதால் நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய தகவல்கள் வந்தால் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



