ஞானசார தேரர் மீண்டும் சிறைசென்றமை மற்றும் அவருடைய காவி உடை அகற்றபட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது, ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவியாக அல்லாமல், ஒரு சாதாரண பொதுமகனைப் போன்று ஆடை அணிந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள புகைப்படமொன்று பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

“இலங்கையில் இருந்து கொண்டு தொண்டை கிழிய மகிந்தவுக்கு ஆதரவாக பேசுகிறார். காவி உடையை கழற்றிவிட்டு ஜப்பானுக்குச் சென்று ஜாலியாக இருக்கிறார். இவை நல்லதல்ல ஞானசார தேரரே..!!” என்ற வாசகத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வந்தது. அதில், இலங்கைக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் சாதாரண பொதுமகனைப் போன்று ஆடை அணிந்திருப்பவர் கலபொடஅத்தே ஞானசார தேரர் எனக் கூறி, புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தப் பதிவு 2016ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதுவரை இந்தப் பதிவு 4,500-க்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனர்களிடையே பகிரப்பட்டுள்ளதுடன், அண்மைய நாட்களிலும் மீண்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)
கலபொடஅத்தே ஞானசார தேரர் எனக் குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வின்போது, அந்தப் புகைப்படத்தில் காணப்படும் நபர் எனக் கூறக்கூடிய ஒரு சாதாரண பொதுமகன், ஞானசார தேரருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதை அவதானிக்க முடிந்தது.
மேலும், அந்தப் புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகள் போலியானவை எனக் குறிப்பிட்டு, பேஸ்புக் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்த தகவல் பின்வருமாறு

சுனில் கொடஹேன அவர்களின் புகைப்படம்
இதன் அடிப்படையில் நாம் மேற்கொண்ட ஆய்வின்போது, சுனில் கொடஹேன எனப்படும் அந்த நபர், ஞானசார தேரரைப் பெரிதும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அவரது பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்தபோதும் இதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பல புகைப்படங்கள் காணப்பட்டன.
அதேபோன்று, அவரது பெயரில் காணப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் மேலும் பல புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.
சுனில் கொடஹேன அவர்களின் தோற்றம் ஞானசார தேரரின் தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கின்ற காரணத்தால், சுனில் கொடஹேனவும் ஞானசார தேரரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றின் கீழ் பதிவிடப்பட்ட கருத்துகளிலும், இவர்கள் இருவரும் சகோதரர்களைப் போன்று ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளனர் என பலர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், ஞானசார தேரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தையும், சுனில் கொடஹேன அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து பெறப்பட்ட பிற புகைப்படங்களையும் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட உருவ ஒப்பீடு கீழே வழங்கப்பட்டுள்ளது.

சுனில் கொடஹேன அவர்களின் மகள் சச்சினி, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது தந்தையான சுனில் கொடஹேன அவர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டிருப்பதை எங்களால் அவதானிக்க முடிந்தது. அவ்வாறான ஒரு புகைப்படத்தை இங்கே காணலாம்.
பொது பல சேனா ஊடகப் பிரிவு
இது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் ஊடகப் பிரிவினரிடமும் நாம் விசாரித்தோம். இதற்குப் பதிலளித்த அந்த அமைப்பின் ஊடகச் செயலாளர், ஞானசார தேரர் ஜப்பானுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குறித்த நபர் அவரைச் சந்தித்தபோது ஞானசார தேரருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டதாகவும், அந்த நபருடன் ஞானசார தேரருக்கு வேறு எந்தவிதமான தனிப்பட்ட அறிமுகமோ தொடர்போ இல்லை என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர், குறித்த நபரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர் ஞானசார தேரர் எனக் கூறி பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், அந்த நபரைத் தொடர்புகொள்வதற்காக ஜப்பானில் உள்ள ஒரு கோயிலுக்கும் ஞானசார தேரர் தகவல் தெரிவித்திருந்ததாகவும், எனினும் இதுவரை அந்த நபரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த புகைப்படத்தில் இருப்பவர் ஞானசார தேரர் அல்ல என்பதை ஊடகச் செயலாளர் உறுதிப்படுத்தினார்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், கலபொடஅத்தே ஞானசார தேரர் ஜப்பானில் சாதாரண பொதுமகனைப் போன்று ஆடை அணிந்திருந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் தவறானது என்பதுடன் அந்த புகைப்படத்தில் இருப்பவர், ஞானசார தேரரின் தோற்றத்துடன் மிகவும் ஒத்த தோற்றத்தைக் கொண்டவரும், ஞானசார தேரர் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டவருமான, அப்போது ஜப்பானில் வசித்து வந்த சுனில் கொடஹேன என்ற இலங்கைப் பிரஜை ஆவார்
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



