நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரத்தினபுரியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளி குதிப்பதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த பதிவில் “ இரத்தினபுரியின் அவல நிலை!”: வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் – சாளத்தில் நீந்தி விளையாடும் மீன்கள் என தெரிவித்து நேற்று (2026.10.27) இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:
எனவே இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளும் காணொளி உண்மையா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த நாட்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து களு கங்கை பெருக்கெடுத்த நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை மற்றும் அது தொடர்பில் பிரதான ஊடங்களில் வெளியான செய்திகளில் மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நாம் முதலில் ஆய்வினை மேற்கொண்டோம்.
இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உண்மை; களு கங்கையின் நீர்மட்டம் சிறிய வெள்ளப்பெருக்கு நிலையை ஏற்படுத்தியது
நீர்ப்பாசனத் திணைக்களம் ஒக்டோபர் 26ஆம் திகதி காலை 11.30 மணிக்கு களு கங்கை ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டது. இரத்தினபுரி, பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பை இங்கே காணலாம்.
அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில், இரத்தினபுரி நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் களு கங்கையின் நீர்மட்டம் 8.20 மீற்றராகப் பதிவாகியிருந்தது. இது சிறிய வெள்ளப்பெருக்குக்கான 7.50 மீற்றர் நீர்மட்ட வரம்பை விட அதிகமாகும். இது தொடர்பான அறிக்கையை இங்கே காணலாம்.
களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இரத்தினபுரி மற்றும் அதன் கீழ்ப்பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார அன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவரது கருத்துகள் தொடர்பான செய்தியை இங்கே வாசிக்கலாம்.
ஒக்டோபர் 27ஆம் திகதி நிலவரப்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு நிலையங்களில் 33 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட செய்தியை இங்கே வாசிக்கலாம்.
ஊடகங்களில் வெளியான காட்சிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள்
ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதான ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கியிருந்தமை காணப்பட்டது.
இரத்தினபுரி – அலுபொத வீதியின் அத்தொய (Eth Oya) பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டதாகவும், கெட்டலியம்பல்ல, கபுகம்பிட்டிய, கஹங்கம மற்றும் கொடிகமுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியை இங்கே காணலாம்.
அத்துடன், எலபாத்த, கரங்கொட மற்றும் திமியாவ ஆகிய பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியிருந்த காட்சிகள் மற்றுமொரு ஊடக செய்தி அறிக்கையில் ஒளிபரப்பாகியது. அந்தக் காணொளியை இங்கே காணலாம்.


எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டிருந்தமை உண்மை எனினும் மேற்குறிப்பிட்ட காணொளி பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியமுடிகின்றது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
ஆகவே நாம் இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய இரத்தினபுரி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். அதன்போது கடந்த நாட்களில் பெய்த கடும் மழைக் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பெல்மடுல்ல, நிவித்திகல , குருவிட்ட, அயகம, எலபாத்த போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனினும் இந்த பாகுதிகளுக்கு சென்று தாம் அறிக்கையிட்ட சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் தொடர்பான காட்சிகளை காணவில்லை எனவும் அவ்வாறு மீன்கள் வீடுகளுக்கு புகுந்தமை தொடர்பில் பிரதேசவாசிகளும் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதனையும் குறிப்பிட்டனர்.
இருப்பினும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில் வெள்ள நீருடன் அடித்து வரப்பட்ட மீன்கள் வீடுகளுக்குள் வெள்ள நீரில் நீந்தும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றதுண்டு என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனினும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த காணொளி இரத்தினபுரியில் இடம்பெற்ற சம்பவம் அல்ல என்பதனை தெரிவித்தனர்.
ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது panitwongchiam எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கடந்த 2026.10.12 ஆம் திகதி இந்த காணொளி பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
மேலும் அந்த காணொளி பகிரப்பட்டிருந்த இன்ஸ்டகிராம் பக்கத்தை நாம் ஆய்வு செய்த போது அந்த பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளிகளே பகிரப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
அதேபோன்று குறித்த பக்கத்தில் மேற்குறிப்பிட்ட காணொளி பகிரப்பட்ட இரண்டு நாட்களில் பகிரப்பட்டிருந்த மற்றுமொரு காணொளியை நாம் அவதானித்த போது மீன்கள் பாய்வதாக குறிப்பிட்ட காணொளியில் இருந்த அதே வீட்டின் உட்புற தோற்றத்தில் மற்றுமொறு காணாளி பகிரப்பட்டிருந்தது. ஆனால் அந்த காணொளியில் AI லேபல் காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. குறித்த இரு காணொளிகளில் காணப்படும் ஒற்றுமையானது கீழே விளக்கப்பட்டுள்ளது.
முதலாவது காணொளி (சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி) காட்சி


இரண்டாவது காணொளியின் காட்சி



இதனடிப்படையில் இந்த இரண்டு காணொளிகளும் ஒரேமாதிரியான சுற்றுபுறத்தை கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த காணொளி தொடர்பில் நாம் மேலும் அவதானிக்கும் போது அதில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்படும் காணொளிகளில் காணெப்படும் பொதுவான குறைப்பாடுகளையும் காணமுடிந்தது.
அதனடிப்படையில் நாம் இந்த காணொளியை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவிகளுகளுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது மேற்குறிப்பிட்ட காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.


மேலும் இந்த காணொளி பல்வேறு சந்தர்பங்களில் உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் காணமுடிந்தது. Link | Link | Link
இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இந்த நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
களு கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களம் ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு வெளியிட்ட தகவல்களின்படி:
| கண்காணிப்பு நிலையம் | பதிவான நீர்மட்டம் | நிலைமை |
| இரத்தினபுரி – களு கங்கை | 8.20 மீற்றர் | சிறிய வெள்ளப்பெருக்கு |
| கலவெல்லாவ (மில்லகந்த) | 6.50 மீற்றர் | சிறிய வெள்ளப்பெருக்கு |
| மகுர – மகுரு கங்கை | 4.69 மீற்றர் | எச்சரிக்கை நிலை |
இரத்தினபுரியில் சிறிய வெள்ளப்பெருக்குக்கான நீர்மட்ட வரம்பு 7.50 மீற்றராக உள்ள நிலையில், அது 8.20 மீற்றராக அதிகரித்திருந்தது.Link
ஒக்டோபர் 27ஆம் திகதி வெள்ள அபாய எச்சரிக்கை
ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை, 27ஆம் திகதி மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- இரத்தினபுரி
- பெல்மடுல்ல
- நிவித்திகல
- குருவிட்ட
- அயகம
- எலபாத்த
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அவற்றின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தகவல்களை மேற்கோள்காட்டி, ஒக்டோபர் 27ஆம் திகதி வெளியான செய்திகளின்படி, நாடு முழுவதும் 12 மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அன்றைய தினம் வெளியான அறிக்கைகளில்:
- 12 மாவட்டங்களில் 12,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- 3,162 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
- 304 பேர் எட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
- ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 227 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்ததுடன், இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருந்தன.
இந்தப் புள்ளிவிவரங்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கானவை மட்டுமல்ல; நாடு முழுவதுமான பாதிப்புகளைக் குறிக்கின்றன.
மேலும், 27ஆம் திகதி வெளியான மற்றுமொரு DMC தகவலின்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு நிலையங்களில் 33 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.Link | Link
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள்
ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை 6 மணி வரையான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 315 குடும்பங்களைச் சேர்ந்த 1,264 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த எண்ணிக்கை ஒக்டோபர் 23 முதல் 26ஆம் திகதி வரையான பாதிப்புகளைக் குறிக்கிறது. இதனை வெள்ளத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என மாத்திரம் கருத முடியாது.
27ஆம் திகதிக்கான இரத்தினபுரி மாவட்டத்தின் முழுமையான பாதிப்பு எண்ணிக்கையைத் தனியாக உறுதிப்படுத்த முடியவில்லை. Link
மண்சரிவு அபாயம்
வெள்ளப்பெருக்குக்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.
இரத்தினபுரி, அயகம, பெல்மடுல்ல, குருவிட்ட, எலபாத்த மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேசங்கள் இதில் உள்ளடங்கியிருந்தன. Link
மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட வாரியான பாதிப்புகள், வீடுகளின் சேதங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கைகள் இறுதியாக கடந்த 25 ஆம் திகதியே வெளியிடப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில், 2026 ஒக்டோபர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்திருந்ததும், சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 27ஆம் திகதி வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தற்போதைய காலநிலை நிலவரம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை படிப்படியாகத் தணிந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான ‘அர்னாப்’ (Arnab) தீவிர சூறாவளி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடைந்து வருவதால், இலங்கையின் காலநிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்: பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை: அவ்வப்போது மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை: பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள்: மணித்தியாலத்திற்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இலங்கையில் அர்னாப் சூறாவளியின் தாக்கம் குறைந்து வருகின்றபோதிலும், பல பகுதிகளில் மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களுக்கான அபாயம் தொடர்கிறது. எனவே, பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். Link | Link
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இரத்தினபுரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளிப் பாய்வதனை போன்று பகிரப்பட்ட காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
மேலும் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளமை உண்மை எனினும் இந்த காணொளி அதனுடன் தொடர்புபட்ட காணொளி அல்ல என்பதுவும் தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


