Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    அனோஜனின் உயிரைக் காப்பாற்றிய ஷரியா சட்டத்தின் முக்கியமான திருப்பம்!

    කරුණු පැහැදිලි කිරීම
    2026-10-19
    9 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியியலாளரான சிவராசா அனோஜன், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்கு அளித்த பதிலின் காரணமாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் இலங்கையின் கிழக்கு

    Subscribe to our WhatsApp Channel

    இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியியலாளரான சிவராசா அனோஜன், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்கு அளித்த பதிலின் காரணமாக, சவூதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான தொழில்நுட்பப் பொறியியலாளர் ஆவார். சிறந்த எதிர்காலத்தைத் தேடி 2025 செப்டெம்பர் மாதம் சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா (Al-Ahsa) பகுதியில் உள்ள மின்கலத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றச் சென்றார்.

    கடந்த சில மாதங்களாக இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அனோஜனின் வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி உச்ச நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்துள்ளது. இச்சம்பவத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையான முழுமையான புலனாய்வு விளக்கம் பின்வருமாறு

    Explainer (விளக்கமளித்தல்)

    கதிர்காமத்திலிருந்து ரியாத் வரை சென்ற இணையவழி மோதல்

    இந்த சம்பவம் முதலில் இலங்கையிலேயே ஆரம்பமானது. கடந்த ஜூன் மாதம் கதிர்காமப் பாதயாத்திரையின்போது கல்முனை பகுதியில் ‘சுப்பிரமணி’ என்ற நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் காலால் உதைத்த காணொளி (Archived Link) சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இலங்கையில் சமூக ஊடகங்கங்கள் வழியாக இந்து–முஸ்லிம் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

    இந்த விவாதம் பேஸ்புக்கில் தீவிரமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்களும் நாயின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த நாய் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவிற்கு அனோஜன் தமிழில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகம் அவர்களையும் அவமதிக்கும் வகையில் கருத்தொன்றைப் பதிவிட்டார்.

    நபிகள் நாயகம் தொடர்பாக அனோஜன் சிவராஜ் பெயரில் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவின் திரைப்பிடிப்பு

    சில நிமிடங்களுக்குள் நீக்கப்பட்ட கருத்து

    தாம் வேலைசெய்து கொண்டிருக்கும் சவூதி நாட்டிலிருந்து வெளியிட்ட கருத்தின் தீவிரத்தையும், தம்மால் மிகக் கடுமையான தவறு நிகழ்ந்துவிட்டதையும் உணர அனோஜனுக்குச் சில நிமிடங்களே தேவைப்பட்டன. பத்து நிமிடங்களுக்குள் அந்தக் கருத்தை (Comment) பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக நீக்கினார். அத்துடன் நிறுத்தாமல், உடனடியாகத் தனது முகம் தெரியும் வகையில் காணொளி ஒன்றைப் பதிவுசெய்து, தமது தவறை ஒப்புக்கொண்டு உலகெங்குமுள்ள அனைத்து இஸ்லாமியர்களிடமும் பகிரங்கமாக மிகவும் பணிவுடன் மன்னிப்புக் கோரியிருந்தார்.

    Facebook

    எனினும், அனோஜன் தனது கருத்தை நீக்குவதற்கு முன்னரே இலங்கையிலிருந்த சிலர் அதன் Screenshots எடுத்திருந்தனர். சவூதி அரேபியாவில் இருந்த எவரும், அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரும் ஆரம்பத்தில் இதுபற்றி அறிந்திருக்கவில்லை. அனோஜனின் குடும்பத்தினர் பின்னர் தெரிவித்தபடி, இலங்கையிலிருந்த அந்தக் குழுவினர் Screenshots அனைத்தையும் அரபு மொழிக்கு முறையாக மொழிபெயர்த்து, அனோஜன் பணியாற்றிய சவூதி மின்கலத் தொழிற்சாலையின் நிர்வாகத்துக்கும் சவூதி அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தனர்.

    நிறுவனத்திற்குள் 24 மணிநேரம் தடுத்து வைத்தல்

    இந்த மின்னஞ்சல்கள் கிடைத்தவுடன் அனோஜன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அனோஜனை நிறுவனத்தின் அலுவலக அறையொன்றில் குறைந்தது 24 மணிநேரம் தடுத்து வைத்துக் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தம்மை அலுவலகத்தில் வைத்துக் கேள்வி கேட்பது குறித்து இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்துக்கு அனோஜன் தெரிவித்தார் என ரஜீவ்காந்த் எம்மிடம் தெரிவித்தார்.

    எனினும், அனோஜனின் தொலைபேசியையும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் நிறுவனம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது. ஜூலை 01ஆம் திகதி நிறுவனத் தலைவர்களே அவரை தம்மாம் (Dammam) பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

    சவூதி பாதுகாப்புப் பிரிவினர் அவரை உத்தியோகபூர்வமாகக் கைது செய்த பின்னர், அவரது தொலைபேசியைப் பரிசோதித்து, அவரது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் இணையத்திலிருந்து நிரந்தரமாக அகற்றியதாக அனோஜனின் சகோதரர் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

    மரண தண்டனைத் தீர்ப்பு

    சவூதியின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் (Al-Ahsa Criminal Court) ஜூலை 27ஆம் திகதி சவூதி இணையக் குற்றச் சட்டத்தின் 6ஆம் பிரிவின் கீழ் அனோஜனுக்கு முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது. தற்போதைய மாற்று விகிதங்களின்படி 3 மில்லியன் சவூதி ரியால் (3,000,000 SAR) இலங்கை ரூபாயில் சுமார் 26.5 கோடி ரூபாய் (265,126,839 ரூபாய்) ஆகும்.

    அனோஜன் சிறையில் இருந்தபோது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை குறித்து அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இதன்படி, அபராதத்தையும் சிறைத்தண்டனையையும் குறைப்பதற்காக அனோஜன் தரப்பினர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குத் தகவல் தெரிவித்தனர். வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக, அனோஜனின் குடும்பத்தினர் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவிட்டு, தூதரக வழக்கறிஞர் ஒருவரின் மூலம் மேன்முறையீடு செய்திருந்தனர்.

    சவூதி அரசுத் தரப்பு வழக்குத்தொடுநர்கள் (Prosecution), இந்த வழக்கை இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் (Sharia Law) கீழ் விசாரிக்குமாறு எதிர் மேன்முறையீடு செய்தனர். இதன் விளைவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மாற்றி அனோஜனுக்கு ‘மரண தண்டனை’ விதித்தது.

    2026 செப்டெம்பர் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்த தருணத்திலிருந்து, எந்தவொரு புதன்கிழமை அல்லது வியாழக்கிழமையிலும் (பொதுவாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாட்கள்) முன்னறிவிப்பின்றி அவர் கொல்லப்படக்கூடிய கடுமையான அபாயம் நிலவியது.

    சிறைக்கூடத்தில் நடந்த சித்திரவதை

    மரண தண்டனை விதிக்கப்பட்டு தம்மாம் சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகள் தங்கவைக்கப்படும் பிரிவில் இருந்தபோது, ஒக்டோபர் 5ஆம் திகதியளவில் மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு தீவிரமடைந்து அனோஜன் தாக்கப்பட்டார். இதில் அவரது தலையிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டன.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அனோஜனின் பாதுகாப்புக்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை உடனடியாக வேறொரு பாதுகாப்பான சிறைக்கூடத்திற்கு மாற்றினர்.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சவூதி சிறை விதிகளின்படி அனோஜனுக்குத் தனிப்பட்ட தொலைபேசி பயன்பாடு தடைசெய்யப்பட்டது. செப்டெம்பர் 28ஆம் திகதி முதல் சில நாட்கள் வீட்டுக்குத் தொலைபேசியில் பேச முடியவில்லை. ஆனால் சிறையில் தாக்கப்பட்ட பின்னர், சிறை அதிகாரிகளின் உதவியுடன் அனோஜனே வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பெடுத்து, தமக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்தும் சிறைக்கூடம் மாற்றப்பட்டமை குறித்தும் அழுதபடி குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக அவரது சகோதரர் எமது விசாரணையில் கூறினார்.

    அனோஜனின் உயிரைக் காப்பாற்ற எழுந்த குரல்கள்

    மரண தண்டனை குறித்த செய்தி வெளியானதும் இன வேறுபாடின்றி ஏறத்தாழ அனைவரும் சமூக ஊடகங்களில் அவருக்காகக் குரல் கொடுத்தனர். அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இராஜதந்திர ரீதியாகத் தலையிடுமாறு வலியுறுத்தி தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூக ஊடகப் பயனர்கள் குரல் எழுப்பினர்.

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் நாடாளுமன்றத்தில் இது குறித்து கடுமையாகக் கேள்வி எழுப்பி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தார்.

    அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஆட்சியாளர்களுக்கு ஒன்றிணைந்த மனிதாபிமான கருணை (Clemency) அல்லது பொதுமன்னிப்புக் கோரிக்கையை அனுப்ப இலங்கையின் முன்னணி தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களில் ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், ஜீவன் தொண்டமான், வி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தனர்.

    சர்வதேச அழுத்தம்

    Amnesty International, Human Rights Watch போன்ற சர்வதேச அமைப்புகளும் இலங்கையின் பௌத்த, இந்து, முஸ்லிம் மதத் தலைவர்களும் (ACJU உட்பட) ஒன்றிணைந்து அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இராஜதந்திர நடவடிக்கை

    சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குடும்பத்தினரைச் சந்தித்து, அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தன்னிடமுள்ள முழுமையான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான பலத்தையும் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலுடன், அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே ஏற்று, விசேட சட்டத்தரணிகள் குழு சவூதிக்குச் சென்றது.

    இந்தக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும போன்ற இலங்கையின் முன்னணி சட்ட நிபுணர்கள் இடம்பெற்றனர். அவர்கள் சவூதியின் இரண்டு முன்னணி சட்ட நிறுவனங்களுடன் இணைந்து, ஷரியா சட்டத்துக்கு ஏற்ப மிகவும் நுணுக்கமாக மேன்முறையீட்டைத் தயாரித்து, 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி சவூதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

    மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர், அதாவது ஒக்டோபர் 13ஆம் திகதி, சவூதி உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கி அனோஜனின் மரண தண்டனையை முழுமையாக இரத்துச் செய்தது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது பேஸ்புக் கணக்கின் மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

    உயிரைக் காப்பாற்றிய சட்டரீதியான திருப்புமுனை

    இலங்கை சட்டக் குழு சவூதி உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) முன் மிகவும் நுணுக்கமான வாதத்தை முன்வைத்தது. ஷரியா சட்டத்தின்படி, ஒருவர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கு ‘முன்னர்’ தமது தவறை ஒப்புக்கொண்டு உண்மையாகவே மன்னிப்புக் கோரியிருந்தால் (Repentance), அவருக்கு ‘ஹத்’ (Hadd) தண்டனை வகைப்பாடு சட்டத்தின் கீழான மாற்ற முடியாத மரண தண்டனையை விதிக்க முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. அனோஜன் தனது தவறுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியதை கருத்தில் கொள்ள முடியுமா என்பது குறித்தும், முஸ்லிம் அல்லாதவர்கள் நபியை அவமதித்தால் சில ஷரியா சட்டப் பிரிவுகளின்படி மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இஸ்லாமியச் சட்டப் பள்ளிகளிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் வெவ்வேறு விளக்கங்களும் காணப்படுவது குறித்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    மேலும், சவூதி அரேபியாவின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 6ஆம் பிரிவின்படி, அனோஜன் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் பதிவை பேஸ்புக்கில் வெளியிட்டதை, அந்தப் பிரிவின் முதலாவது உட்பிரிவின் கீழ் வரும் ‘மத விழுமியங்களுக்குத் தீங்கு விளைவித்தல்’ என ஆரம்பக் குற்றவியல் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. அதன்படி அப்பிரிவின் கீழ் வழங்கக்கூடிய அதிகபட்சத் தண்டனையான ஐந்து ஆண்டுகள் சிறையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதே குற்றத்திற்காக மீண்டும் ஷரியா சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடியுமா என்ற கேள்வியும், மொழிபெயர்ப்பின்போது ஏற்பட்ட பிழைகள் தொடர்பான விடயங்களும் மேன்முறையீட்டில் முன்வைக்கப்பட்டதாக சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் சட்டக் குழுவில் பங்கேற்ற மற்றொரு சட்டத்தரணியும் எமது விசாரணையின் போது உறுதிப்படுத்தினர்.

    ஷரியா சட்டத்தின் சிக்கலான தன்மை

    சவூதி அரேபிய நீதித்துறை மேற்கத்திய சட்ட அமைப்பிலிருந்தும் இலங்கையில் நடைமுறையிலுள்ள ரோமன்–டச்சு சட்ட அமைப்பிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாகும். சவூதி அரேபியாவின் 1992ஆம் ஆண்டின் அடிப்படை ஆட்சிச் சட்டத்தின் (Basic Law of Governance 1992) 1 மற்றும் 7ஆம் சரத்துகளின்படி (Articles 1 & 7), அந்நாட்டின் உயர்ந்த அரசியலமைப்பாகப் புனித குர்ஆனும் நபிமொழிகளும் விளங்குகின்றன. சவூதி அரேபிய அமைச்சரவையின் நிபுணர்கள் பணியகத்தின் (Bureau of Experts at the Council of Ministers) 48ஆம் சரத்தின்படி, அந்நாட்டு நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும்போது இஸ்லாமிய ஷரியா சட்டத்தை (Sharia Law) நேரடியாக அமுல்படுத்த வேண்டும்.

    Human Rights Watch (HRW), Amnesty International போன்ற சர்வதேச உத்தியோகபூர்வ ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவதன்படி, சவூதி குற்றவியல் சட்டம் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அனோஜனின் வழக்கில் அவற்றில் இரண்டு முக்கிய சட்ட வகைகள் தாக்கம் செலுத்தின.

    ‘ஹத்’ அல்லது ‘ஹுதூத்’ (Hadd / Hudud) சட்டம்:

    இஸ்லாமிய இறையியலின்படி ‘இறைவனின் உரிமைகளை’ மீறுவதாகக் கருதப்படும் மிகக் கடுமையான குற்றங்கள் இதில் அடங்கும். இதில் மிகவும் அச்சுறுத்தலான அம்சம், இந்த குற்றங்களுக்கான தண்டனைகள் மத நூல்களிலேயே நேரடியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகும். எனவே நீதிபதிக்கோ, பாதிக்கப்பட்டவருக்கோ, நாட்டின் ஆட்சியாளரான சவூதி மன்னருக்குக்கூட இத்தண்டனைகளைக் குறைப்பதற்கோ மன்னிப்பு வழங்குவதற்கோ சட்ட அதிகாரம் இல்லை. மத நிந்தனைக்கு (Blasphemy) ‘ஹத்’ தண்டனை சட்ட வகைப்பாடு பயன்படுத்தப்பட்டால் கிடைக்கும் ஒரே தண்டனை மரண தண்டனையாகும். சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்தது இந்தக் கடுமையான அடிப்படையிலேயே ஆகும்.

    ‘தஃஸீர்’ (Ta’zir) சட்டம்:

    மத நூல்களில் குறிப்பிட்டு தண்டனைகள் நிர்ணயிக்கப்படாத, ஆனால் சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்கள் இதில் அடங்கும். இங்கு தண்டனையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் நீதிபதிக்கு உண்டு, நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. சவூதி அரேபிய இணையக் குற்றத் தடுப்புச் சட்டம் (Anti-Cybercrime Law) இந்த வகைக்குள் அடங்குகிறது.

    அனோஜனுக்காக ஆஜரான இலங்கை சட்டக் குழு, சவூதி உச்ச நீதிமன்றத்தின் முன் மேன்முறையீட்டு நீதிமன்றம் பயன்படுத்திய இந்த ‘ஹத்’ சட்ட அடிப்படையையே தகர்த்தது. ஷரியா சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமது தவறை உணர்ந்து உண்மையாக மனம் வருந்தி மன்னிப்புக் கோரியிருந்தால், அவருக்கு மாற்ற முடியாத ‘ஹத்’ மரண தண்டனையை விதிக்க முடியாது என சட்டத்தரணிகள் மேன்முறையீட்டில் தெரிவித்தனர்.

    உயர் நீதிமன்றம் இந்தச் சட்டரீதியான விடயத்தை ஏற்றுக்கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் தொழில்நுட்பப் பிழை இருப்பதாக முடிவுசெய்து மரண தண்டனையை இரத்துச் செய்தது. அதன்படி, இனி கீழ்நிலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்போது, மரண தண்டனை இல்லாததும் நீதிபதியின் தீர்மானத்துக்கும் சலுகை ஏற்பாடுகளுக்கும் இடமளிப்பதுமான ‘தஃஸீர்’ சட்டத்தின் (இணையக் குற்றச் சட்டத்தின் 6ஆம் பிரிவு) கீழ் மாத்திரமே இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

    அனோஜனின் சம்பவத்திற்குப் பொருந்தாத மற்றொரு சட்டம்: கிஸாஸ் (Qisas) – பழிவாங்கும் நீதி (Retributive Justice)

    ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சட்டமாகும். கொலை மற்றும் உடற்காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும். இங்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமையும் பாதிக்கப்பட்ட தரப்பின் குடும்பத்தினருக்கு (Victim’s Family) உண்டு. அந்தக் குடும்பத்தினர் மரண தண்டனையைக் கோரலாம்; அல்லது ‘திய்யா’ (Diyya – Blood Money) எனப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாம்.

    ஷரியா சட்டத்தின் சில பிரிவுகளின்படி முஸ்லிம் அல்லாதவர்கள் நபிகள் நாயகத்தை அவமதிப்பதற்கான தண்டனை

    ஷரியா சட்டத்தின் சில பிரிவுகளின்படி, முஸ்லிம் அல்லாத ஒருவர் நபிகள் நாயகத்தை அவமதித்தால் மரண தண்டனை விதிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. எனினும் இது தொடர்பாக இஸ்லாமிய சட்டவியலின் வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே (Schools of Jurisprudence / Madhhabs) கடுமையான கருத்து வேறுபாடுகளும் பல்வேறு விளக்கங்களும் காணப்படுகின்றன. இது குறித்த தகவல்கள் இங்கே மற்றும் இங்கே காணலாம்

    இஸ்லாமியச் சட்டத்தின் நான்கு மரபுகளின்படி இந்த நிலைமை மாறுபடும் விதம்

    ஹனபி (Hanafi) பிரிவு (ஒப்பீட்டளவில் தளர்வான நிலைப்பாடு):

    இந்தப் பிரிவை நிறுவிய அபூ ஹனீபாவின் பிரதான கருத்தின்படி, முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு அவமதிப்புக் குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க முடியாது. முஸ்லிம் அல்லாத ஒருவரின் அடிப்படை இறைமறுப்பு (குஃப்ர்) அவமதிப்பைவிடப் பெரிய பாவமாக இருந்தாலும் அதற்காக அவரைக் கொல்வதில்லை; எனவே அவமதிப்பிற்காகவும் மரண தண்டனை விதிக்க முடியாது என்பதே அவர்களின் விளக்கம். இதுபோன்ற சூழலில் மரண தண்டனைக்குப் பதிலாகச் சிறைத்தண்டனை அல்லது கசையடி போன்ற ‘தஃஸீர்’ (Ta’zir – பொதுத் தண்டனைகள்) வழங்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எனினும் பிற்கால ஹனபி அறிஞர்கள் சிலர், ஆட்சியாளரின் விருப்பத்திற்கேற்ப அல்லது ஒருவர் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக அவமதித்தால் மரண தண்டனை வழங்கலாம் எனக் கூறியுள்ளனர். தகவல்கள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

    மாலிகி (Maliki), ஷாஃபிஈ (Shafi’i), ஹன்பலி (Hanbali) பிரிவுகள் (கடுமையான நிலைப்பாடு):

    இந்த மூன்று முக்கியச் சட்டப் பள்ளிகளிலும் பெரும்பான்மையினரின் (Jumhur) கருத்து, முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் நபிகள் நாயகத்தை அவமதித்தால் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தக் குற்றத்தை இஸ்லாமிய அரசுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களை (Dhimmi) மீறுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

    மன்னிப்பு வழங்குவதிலுள்ள வேறுபாடுகள்: ஷாஃபிஈ பிரிவின்படி குற்றவாளி உண்மையாக மனம் வருந்தி மன்னிப்புக் கோரினாலோ இஸ்லாம் மதத்தைத் தழுவினாலோ மரண தண்டனையிலிருந்து விடுபடலாம். ஆனால் மாலிகி மற்றும் ஹன்பலி பிரிவுகளின் சில கடுமையான கருத்துகளின்படி, அவமதித்தவர் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால் மன்னிப்புக் கோரினாலும் மரண தண்டனையை நிறைவேற்றலாம். தகவல்கள் இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே.

    நவீன அறிஞர்களின் கருத்து (Modern Scholars):

    பல நவீன இஸ்லாமிய அறிஞர்களும் ஆய்வாளர்களும், மத நிந்தனைக்காக இவ்வுலகில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று புனித குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர். அத்தகைய அவமதிப்பாளர்களைப் புறக்கணிக்குமாறோ அவர்களுக்கு தர்க்கரீதியாகப் பதிலளிக்குமாறோ மாத்திரமே குர்ஆன் கூறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தகவல்கள் இங்கே மற்றும் இங்கே.

    அனோஜனின் வழக்கில் இந்தச் சட்டம் எவ்வாறு தாக்கம் செலுத்தியது?

    சவூதி அரேபியா உத்தியோகபூர்வமாகக் கடுமையான ஹன்பலி சட்ட மரபைப் பின்பற்றுகிறது. அனோஜன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முஸ்லிம் அல்லாதவர் ஆவார். நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோது, சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் ஹன்பலி மரபின்படி அவருக்கு மரண தண்டனை விதித்தது.

    ஆனால் இலங்கை சட்டக் குழு சவூதி உச்ச நீதிமன்றத்தில், அனோஜன் கைது செய்யப்படுவதற்கு முன்னரே பத்து நிமிடங்களுக்குள் கருத்தை நீக்கி மன்னிப்புக் கோரியதால், இஸ்லாமியச் சட்டத்தின் சலுகை ஏற்பாடுகளின் கீழ் அவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது என வாதிட்டது. இலங்கை சட்டத்தரணிகள் முன்வைத்த மற்றைய வாதங்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை நீக்கியது.

    அனோஜனுக்கு அடுத்து என்ன நடக்கும்?

    சவூதி சட்ட வரலாற்றில் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டபோது இரண்டாவது முறையாகவும் மரண தண்டனை வழங்கப்பட்ட துயரமான சம்பவங்கள் இருப்பதாக, அப்துல்லா அல்-ஹுவைதி வழக்கு போன்றவற்றைக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அறிக்கைகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

    எனினும், ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவிப்பதன்படி, அனோஜனின் வழக்கில் மரண தண்டனை வழங்கக்கூடிய அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் முடக்கியுள்ளதால், அவருக்கு மீண்டும் எந்த வகையிலும் மரண தண்டனை விதிக்கப்படாது.

    எதிர்வரும் இரு வாரங்களுக்குள் கீழ்நிலை நீதிமன்றம் அவருக்குப் புதிய தண்டனையொன்றை (Fresh Sentence) விதிக்கவுள்ளது. அப்போது சவூதி இணையக் குற்றச் சட்டத்தின் கீழ் முன்னர் விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அல்லது அதைவிடக் குறைந்த, சலுகையுள்ள தண்டனையோ வழங்கப்பட்டு, அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    ஒரு வார்த்தை மாற்றிய வாழ்க்கை

    இராஜதந்திரத் தலையீடும் மிகப் பெரிய சட்டச் செலவுகளும் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அனோஜன் சிவராசாவின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்தப் புலனாய்வு அறிக்கை இறுதியில் நமக்கு உணர்த்தும் முக்கியமான பாடம், டிஜிட்டல் வெளியில் நாம் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் வெளிநாடு செல்லும்போது அந்தந்த நாடுகளின் மத மற்றும் கலாச்சார சட்ட அமைப்புகள் குறித்தும் இன்னும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்பதாகும். ஒரு கணத்தில் எழுதப்படும் ஒரு வார்த்தை, மற்றொரு நாட்டில் மரண உத்தரவாக மாறக்கூடும் என்பதை அனோஜனின் கதை நமக்கு உணர்த்துகிறது.


    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.