
INTRO
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, 2026 செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் பிணை வழங்கப்பட்டதாகக் குறிப்பிடும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

நாமல் பிணையில் விடுதலை என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு கடந்த 2026.09.04 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.


Fact Check (உண்மை அறிவோம்)
செப்டெம்பர் 04ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்தது முதல், குறித்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன. ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அன்றைய தினமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக எந்தவொரு பிரதான ஊடகமோ அல்லது உத்தியோகபூர்வ மூலங்களின் ஊடாகவோ செய்தி வெளியிடவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட மூலங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஏர்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவிப்பின் பேரில், நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 04ஆம் திகதி காலை இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்திருந்தார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் சுமார் 5 மணிநேரம் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தி, நீண்ட வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், வெளிப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகளால் பிற்பகல் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இது தொடர்பான ஊடக அறிக்கைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்படவில்லை. செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, நாமல் ராஜபக்ஷ ஆகியோரை 2026 செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அன்றைய தினமே, அதாவது செப்டெம்பர் 04ஆம் திகதி, நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பிரதான ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியுள்ளது.Link
பொலிஸ் ஊடகப் பிரிவு
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பில் மேலதிகமாக உறுதிப்படுத்துவதற்காக, இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவிடம் நாம் விசாரித்தோம்.
இதன்போது, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) வந்த நாமல் ராஜபக்ஷ அங்கு கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன
இது தொடர்பாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன அவர்களிடமும் நாம் விசாரணை மேற்கொண்டோம். இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மைக்குப் புறம்பானவை என அவரும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது கொழும்பு ரிமான்ட் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏன் கைது செய்யப்பட்டார்?
இலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 2013–2015 காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த விமானக் கொள்வனவு நடவடிக்கையின்போது, ஐரோப்பிய ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்தினால் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, இந்த இலஞ்சப் பணம் சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ‘BIZ Solutions Inc’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பணம் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ‘Sabre Vision Holdings Ltd’ என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் வழங்கிய வாக்குமூலம், பிரான்ஸில் உள்ள ஏர்பஸ் அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்பதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. மாறாக, நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



