பிரான்ஸில் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் போராட்டமாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள், பின்னர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரச சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவதற்கு எதிரான நாடளாவிய போராட்டங்களாக விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் ஆரம்பமாகி தற்போது சுமார் ஆறு வாரங்கள் கடந்துள்ளன.
ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், ஒக்டோபர் 24ஆம் திகதி வார இறுதியில் நடைபெற்ற போராட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வன்முறைகளுடன் இடம்பெற்றன.
இதனிடையே, ஒக்டோபர் 26ஆம் திகதி பல்கலைக்கழக அனுமதி முறையில் மாற்றங்களை மேற்கொள்ளுதல், உயர்கல்விக்கான மேலதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பாடசாலை மறுசீரமைப்புகளுக்காகக் கடனுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரான்ஸில் இடம்பெற்று வரும் போராட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீனக் கொடியை ஏற்றியதாகக் கூறி காணொளி ஒன்றும் புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):


Facebook | Archived Link | Facebook | Archived Link
குறித்த பதிவுகளில் பிரான்ஸ் ஈபிள் டவரில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டது எனவும் ஈபிள் கோபுரத்தின் மேல் பாலஸ்தீன கொடி அவங்க காரணம் இல்ல, உள்ளூர் பிரான்ஸ் மக்களே ஏத்திக்கிட்டாங்க அப்படித்தானே சொல்ல வரீங்க.. உன்னோட சுயநலத்தால் நாட்டையே அழித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதாவது புரியுதா மேக்ரான்.. என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த 2026.10.20 மற்றும் 2026.10.24 ஆம் திகதிகளில் பகிரப்பட்டிருந்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:
எனவே 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பலஸ்தீனக் கொடியை ஏற்றியதாகக் கூறப்படும் புகைப்படம் மற்றும் காணொளிகள் உண்மையா என்பதுவே இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈபிள் கோபுரத்தின் உச்சியில் கொடி ஏற்றப்பட்டதாக எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை
பிரான்ஸில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்களின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீனக் கொடியை ஏற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முக்கிய சொற்களைப் பயன்படுத்தி நாம் தேடுதலை மேற்கொண்டோம். எனினும், இதனை உறுதிப்படுத்தும் எந்தவொரு நம்பகமான ஊடகச் செய்தியோ அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்போ எமக்குக் கிடைக்கவில்லை.
ஒக்டோபர் 17ஆம் திகதி மார்செய் (Marseille) நகர மண்டபத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அந்தச் செய்திகளில் எதிலும் ஈபிள் கோபுரத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட உண்மை கண்டறிதல் கட்டுரையை இங்கே பார்வையிடலாம்.
உண்மையில் பாலஸ்தீனக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது மே மாதத்தில், ஈபிள் கோபுரத்தின் முதலாவது தளத்திலேயே!
எனினும், ஈபிள் கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடி காட்சிப்படுத்தப்பட்ட உண்மையான சம்பவமொன்று, ஒக்டோபர் மாதப் போராட்டங்களுக்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
1948ஆம் ஆண்டு பெருமளவிலான பலஸ்தீன மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்ததை நினைவுகூரும் ‘நக்பா’ (Nakba) தினத்தின் 78ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி ‘Extinction Rebellion France’ என்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அமைப்பு, ஈபிள் கோபுரத்தின் முதலாவது தளத்திலிருந்து பாரிய பாலஸ்தீனக் கொடியொன்றைத் தொங்கவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் தரப்பை மேற்கோள்காட்டி குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பாலஸ்தீனக் கொடி ஈபிள் கோபுரத்தின் முதலாவது தளத்திலேயே தொங்கவிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படும் காட்சிகளில், ஈபிள் கோபுரத்தின் உச்சியிலும் அதன் மிக உயரமான தளத்திலும் இரண்டு பாலஸ்தீனக் கொடிகள் காணப்படுகின்றன.
2026ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற உண்மையான சம்பவத்தின் காணொளியை இங்கே பார்வையிடலாம்.
இரண்டு கொடிகளும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை
சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காட்சியில், ஈபிள் கோபுரத்தின் மிக உயரமான தளத்தில் தொங்கவிடப்பட்டுள்ள கொடி பாலஸ்தீனக் கொடியை ஒத்ததாகக் காணப்படுகிறது. எனினும், கோபுரத்தின் உச்சியில் காணப்படும் கொடியின் சிவப்பு முக்கோணப் பகுதிக்குள் வெள்ளை நிற நட்சத்திரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது ஜோர்தான் நாட்டின் தேசியக் கொடியை ஒத்ததாகக் காணப்பட்டாலும், ஜோர்தான் கொடியில் ஏழு முனைகளைக் கொண்ட நட்சத்திரமே இடம்பெற்றுள்ளது.
ஆனால், வைரலாகப் பரவும் காட்சியில் உள்ள கொடியில் ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரம் காணப்படுவதாகவும், அது எந்தவொரு நாட்டின் தேசியக் கொடியுடனும் பொருந்தவில்லை என்றும் இத்தாலியைச் சேர்ந்த உண்மை கண்டறிதல் இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் காட்சிகளில் இவ்வாறான முரண்பாடுகள் பொதுவாகக் காணப்படுகின்றன.

கோபுரத்தின் இரும்புக் கட்டமைப்புகள் சிதைந்துள்ளதுடன், மனிதர்களின் அளவுகளும் பொருந்தவில்லை
காணொளியில் கேமரா மேல்நோக்கி நகரும்போது, ஈபிள் கோபுரத்தின் இரும்புக் கட்டமைப்புகள் சிதைந்து, ஒன்றோடொன்று கலந்து காணப்படுகின்றன.
மேலும், கோபுரத்தின் உச்சியில் நிற்கும் நபர்கள், கோபுரத்தின் உண்மையான அளவுடன் ஒப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாகப் பெரியவர்களாகத் தோன்றுகின்றனர்.
இவ்வாறான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிற உண்மைச் சரிபார்ப்பாளர்கள், குறித்த காணொளி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட போலியான காணொளி எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே பார்வையிடலாம்.

காணொளியை முதலில் வெளியிட்டவர் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்க உருவாக்குநர்
இந்தக் காணொளியின் அசல் பதிவாக அடையாளம் காணப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவை, தன்னை ஒளி-ஒலி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்க உருவாக்குநர் என அறிமுகப்படுத்தும் கணக்கொன்று வெளியிட்டுள்ளது.
மேலும், அந்தப் பதிவின் ஸ்பானிஷ் மொழியிலான விளக்கத்திலேயே, இது உண்மையான காட்சி அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்களை இங்கே பார்வையிடலாம்.
AI கண்டறிதல் கருவிகளும் அதிக சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன
இந்தக் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களைக் கண்டறியும் கருவிகள் மூலம் நாம் பரிசோதித்தபோது, அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது உறுதியானது.


ஒரே காணொளியின் வெவ்வேறு பிரதிகளைப் பரிசோதித்தபோது, AI கண்டறிதல் கருவிகள் வெவ்வேறு முடிவுகளை வழங்கியுள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு பரிசோதனையில் 99.1 சதவீதமும், மற்றொரு பரிசோதனையில் 65.3 சதவீதமும் AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கே பார்வையிடலாம்.
இந்தக் கருவிகளின் முடிவுகள் கூடுதல் ஆதாரங்களாக மட்டுமே கருதப்பட வேண்டும். இந்தக் காணொளி AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதை உறுதிப்படுத்துவதில், அதன் அசல் பதிவிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதே மிக முக்கியமான ஆதாரமாகும்.
இவ்வாறான காணொளிகளைக் காணும்போது, கொடிகளில் உள்ள சின்னங்கள், கட்டடங்களின் வடிவமைப்பு, மனிதர்களின் அளவுகள் போன்ற சிறிய விபரங்களைக் கவனமாக ஆராய்வது அவசியம். அத்துடன், தலைகீழ் ரிவர்ஸ் இமேஜ் தேடுதல் மூலம் படங்களின் மூலத்தைச் சரிபார்ப்பதோடு, காணொளியை முதலில் வெளியிட்ட கணக்கு மற்றும் வெளியிடப்பட்ட திகதி ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும்.
இந்தக் கூற்றின் பின்னணி
பிரான்ஸில் இடம்பெற்ற சில போராட்டங்களின்போது பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறு சிலர் கலந்துகொண்டமை உண்மையாகும். ஒக்டோபர் 17ஆம் திகதி மார்செய் நகர மண்டபத்திற்குள் நுழைந்தவர்களில் சிலரும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியிருந்ததாக எமது முந்தைய அறிக்கையில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மே மாதத்தில் ஈபிள் கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடி காட்சிப்படுத்தப்பட்ட உண்மையான சம்பவமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றிருந்தது.
எனினும், இந்தச் சம்பவங்கள் எதுவும் ஒக்டோபர் மாதப் போராட்டங்களின்போது ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீனக் கொடிகள் ஏற்றப்பட்டன என்பதற்கான ஆதாரங்களாக அமையவில்லை.
பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பாக AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் பரவிய மற்றொரு சம்பவம் குறித்த எமது அறிக்கையை இங்கே வாசிக்கலாம்.
சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு அமைப்புகளின் ஆய்வு
Fact Crescendo மியன்மார் குழு உள்ளிட்ட பல சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு அமைப்புகளும், ஈபிள் கோபுரத்தின் உச்சியில் வெளிநாட்டுக் கொடியை ஏற்றியதாகக் காட்டும் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளன. Fact Crescendo Myanmar Full Fact –
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறிப் பகிரப்படும் காணொளியும் புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும். குறித்த காணொளியின் அசல் பதிவிலேயே அது AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணொளியில் காணப்படும் கொடிகளின் சின்னங்களும் ஈபிள் கோபுரத்தின் கட்டமைப்பும் உண்மையானவற்றுடன் பொருந்தவில்லை.
மேலும“ ஈபிள் கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடி காட்சிப்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம், 2026ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி நக்பா தினத்தை முன்னிட்டு கோபுரத்தின் முதலாவது தளத்தில் இடம்பெற்ற போராட்டமாகும். ஒக்டோபர் மாதப் போராட்டங்களின்போது ஈபிள் கோபுரத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


