
INTRO
2026 ஆகஸ்ட் 26ஆம் திகதி நேபாளத்தைத் தாக்கிய உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த அனர்த்தத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தனது முதுகில் மற்றொரு சிறு குழந்தையை சுமந்துகொண்டு நடந்து செல்லும் மனதை உருக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
நேபாள வெள்ளத்தில் பெற்றோரை இழந்த சிறுவன்: தோளில் தங்கையைச் சுமந்து அழுதபடி தேடும் உருக்கமான காட்சி
நேபாள வெள்ளம் இதுவரை இல்லாத பல்வேறு அனுபவம மற்றும் ஆச்சர்ய காட்சிகளையும், படிப்பினைகளையும் தந்து சென்றுள்ளது.
புதிது புதிதாக தினம் தினம் பல்வேறு வியக்கத்த்கக்க காட்சிகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் நேபாள வெள்ள அனர்த்ததில் தனது தாய், தந்தையரை தொலைத்துவிட்ட இந்த சிறுவன் தனது தோளில் தன் சகோதரியை சுமந்துகொண்டு இருவரும் அழுதழுது பெற்றோரை தேடி அலையும் காட்சி உலகம் முழுவதும் வைரலாகி வருவதுடன் பரிதாப அலையை தோற்றுவித்துள்ளது.
நேபாள வெள்ளத்தில் இதுவரை சுமார் 3500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதுடன், இதுபோன்று இருமடங்கானோர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. என குறிப்பிட்டு இந்த காணொளியானது, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
காணொளியின் முக்கிய காட்சிகளைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இதே காணொளியின் நீளமான பதிப்பு YouTube-ல் பதிவிடப்பட்டிருந்தது. அந்தக் காணொளியின் மேற்பகுதியில் “Thien Duyen” என்று காணப்பட்டது.
இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மேலதிக தேடலை மேற்கொண்டபோது, அதே பெயரில் உள்ள Instagram பக்கம் ஒன்று கண்டறியப்பட்டது. அந்தப் பக்கத்தில் வைரலான காணொளியின் நீளமான பதிப்பு, “கடும் வெயிலில் சிறுவன் தனது இளைய சகோதரரைச் சுமந்து செல்கிறான்” என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த Instagram பக்கத்தில் இந்தக் காணொளியைத் தவிர, சிறுவர்கள் தொடர்பான பல காணொளிகளும் பதிவிடப்பட்டிருந்தன.
2026 செப்டம்பர் 2ஆம் திகதி, அதே குழந்தைகள் இடம்பெறும் மற்றொரு காணொளியும் அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
ஆகவே அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்தபோது, அதன் நாட்டுக் குறியீடு +84 எனத் தெரியவந்தது. +84 என்பது வியட்நாமின் சர்வதேச தொலைபேசி குறியீடாகும்.
இதன் மூலம் இந்தக் காணொளி நேபாளத்தைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது.
இந்த காணொளி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டபோது, Thien Duyen என்ற வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் எமக்கு பதில் வழங்கினார், அதன்போது, இந்தக் காணொளி 2026 ஆகஸ்ட் 11ஆம் திகதி வியட்நாமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தொலைதூர மலைப்பாங்கான மாகாணமான ஹா ஜியாங் (Ha Giang) பகுதியில் படமாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அந்தக் காணொளியில் கிராமப்புற மலைக் கிராமத்தில் வசிக்கும் இரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
எனவே, வியட்நாமில் படமாக்கப்பட்ட இந்தக் காணொளிக்கும் நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், நோபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் தனது முதுகில் மற்றொரு சிறு குழந்தையை சுமந்துகொண்டு நடந்து செல்லும் மனதை உருக்கும் காணொளி என பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், வைரலான காணொளி உண்மையில் வியட்நாமின் ஹா ஜியாங் பகுதியில் 2026 ஆகஸ்ட் 11ஆம் திகதி படமாக்கப்பட்டது. இந்தக் காணொளியை டிஜிட்டல் content creator ஆன Thien Duyen என்பவர் உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என்பது கண்டறிப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



