
INTRO
பதுளையில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
பதுளையில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் விரட்டி விரட்டி தாக்குதல்.
முஸ்லிம்களது வாகனங்கள்,வர்த்தக நிலையங்கள் சேதமான போதும் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினர் மீது சிங்களவர்கள் ஆவேசமாக தாக்கிய காணொளி இது.
களியாட்ட நிகழ்வு ஒன்றில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை தரப்படவில்லை என சிங்களவர்கள் ஆவேசமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
பொலிஸ் அங்கு வந்த போதும் கலவரம் தொடர்ந்தது
‘நீங்கள் இங்கு எப்போது வந்தீர்கள்? நாங்கள் இங்கே காலாகாலமாக இருக்கிறோம்’ என கத்தியபடி தாக்கினர்.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பகிருங்கள்
மேலும் கலவர காணொளிகளுக்கு fallow செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளியானது 2026.08.24 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதன சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பதுளையில் மாத்திரம் அல்ல நாட்டின் எந்த பகுதியில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்கும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் இந்த காணொளி பகிரப்படும் விதம் தொடர்பில் நாம் பார்க்கும் ஒரே விதமான தலைப்புடனேயே அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அவ்வாறான ஒரு சம்பவம் உண்மையில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அது நாடு முழுவது வெவ்வேறு வடிவங்களில் தலைப்புகளுடன் பகிரப்பட்டிருக்கும் ஆனால் இங்கு ஒரே தலைப்புடன் பகிரப்பட்டிருப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கும் ஒரு காரணியாகவும் அமைகிறது.
பதுளை பொலிஸ நிலையம்
ஆகவே மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று பதுளையில் களியாட்ட நிகழ்வு ஒன்றில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை தரப்படவில்லை என சிங்களவர்கள் ஆவேசமாக முஸ்லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளனவா என நாம் பதுளை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது அவ்வாறான எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் தற்போது உயர்தரப்பரீட்சைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக களியாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
பதுளை பிராந்திய ஊடகவியலாளர்கள்
ஆகவே நாம் இவ்வாறான ஒரு சம்பவம் பதுளையில் இடம்பெற்றதா என பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்பு கொண்டு வினவியபோது, பதுளையில் அவ்வாறான எந்த களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெறவில்லை என்பதுடன் மேற்குறிப்பிட்ட பதிவில் குறிப்பிடப்படுவதனைப் போன்று முஸ்லிம்கள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்தும் எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பதனை உறுதிப்படுத்தினர்.
அது மாத்திரமன்றி குறித்த காணொளியை பார்க்கும் போது அது பதுளை இல்லை எனவும் அது வேறு பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.
ரிவர்ஸ் இமேஜ் தேடுதல்
மேற்குறிப்பிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று அவ்வாறான ஒரு சம்பவம் பதுளையில் இடம்பெறவில்லை எனில் உண்மையில் இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பதனை ஆராய்வதற்காக நாம் அந்த காணொளியின் சில காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது எமக்கு இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
சம்பவத்தை நேரில் கண்டவர்
இருப்பினும் அந்த காட்சியில் Asard Bhai Hotel என்ற பெயர் பலகை ஒன்றை எம்மால் காணமுடிந்தது.
ஆகவே நாம் Asard Bhai Hotel என்ற பெயரை நாம் இணையத்தில் ஆராய்ந்தபோது அது ஹப்புத்தளை நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் என்பதனை அறிய முடிந்தது.
எனவே நாம் அந்த உணவகத்தை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பில் வினவியிருந்தோம். அதன்போது misty weekend food festival என்ற ஒரு நிகழ்வு கடந்த 21,22, 23 ஆம் திகதிகளில் ஹப்புத்தளையில் இடம்பெற்றதாகவும், அதன்போது நிகழ்வின் இறுதி நாளான 23 ஆம் திகதி இரவில் DJ NIGHT ஒன்று இடம்பெற்றதாகவும் இதன்போது அந்த DJ NIGHT முடிவுறும் தருவாயில் அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த சிலர் குடிபோதையில் இருந்தமையினால் அவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்று பின்னர் அது சிறு கைகலப்பாக மாறியதாகவும் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் அதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் பிரச்சினையை சுமுகமாக முடித்து வைத்துவிட்டு அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று இது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே கலவரம் அல்ல எனவும், சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே சிலர் இவ்வாறான தவறான தகவல்களை பரப்புகின்றார்கள் என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதே போன்று அந்த நிகழ்விற்கு சிங்களம், முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் கலந்துகொண்டிருந்ததாகவும், இது தனிப்பட்ட சிலருக்கு இடையில் ஏற்பட்ட ஒரு குழப்ப நிலையே தவிர இது இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரம் அல்ல என்பதனையும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
ஹப்புத்தளை பொலிஸ் நிலையம்
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான உண்மையை அறிய நாம் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி உண்மையான காணொளியாக இருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று அது சிங்கள மக்களினால் முஸ்லிம் மக்கள் தாக்குதலுக்கான சம்பவம் அல்ல என தெரிவித்தனர்.
ஹப்புத்தளையில் இடம்பெற்ற misty weekend food festival என்ற நிகழ்வின் இறுதி நாளான கடந்த 23 ஆம் திகதி அந்த நிகழ்விற்கு வந்த சிலருக்கிடையில் கைகலப்பு இடமபெற்றதாகவும் இதன்போது அந்த நிகழ்வின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் அந்த பிரச்சினை சமாதானத்திற்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் குறிப்பிடப்படுவதனைப் போன்று இது சிங்கள மக்கள் முஸ்லிம் மக்கள் மீது நடத்திய தாக்குதல் அல்ல எனவும், முஸ்லிம்களது வாகனங்கள்,வர்த்தக நிலையங்கள் சேதமானதாக, பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் போலியானது என அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், அங்கு வந்தவர்கள் சிங்களவர்களா அல்லது முஸ்லிம்களா என்பது கூடு சரியாக தெரியாது எனவும் அதற்குள் அந்த பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்பதுடன் எவரும் கைது கூட செய்யப்பட்வில்லை என்பதனையும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை பிராந்திய ஊடகவியலாளர்கள்
நாம் குறித்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம் இதன்போது கடந்த 23 ஆம் திகதி ஹப்புத்தளையில் இடம்பெற்ற misty weekend food festival நிகழ்வின் இறுதி தருவாயில் இவ்வாறான ஒரு கைகலப்பு இடம்பெற்றது உண்மை தான் எனினும் அது முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான கலவரம் அல்ல எனவும் இது அந்த நிகழ்விற்கு வருகைத்தந்த சிலருக்க இடையில் ஏற்பட்ட பிரச்சினை மாத்திரமே என்பதனையும் குறிப்பிட்டனர்.
குறித்த காணொளியை நாம் உற்று கவனிக்கும் போது அதில் மக்கள் மீது விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிகளை காணமுடியவில்லை. மாறாக சிலருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும் மேலும் சிலர் வந்து சமாதானப்படுத்த முயற்சிக்கும் வேளையில் சிலருக்கு இடையில் சிறியளவிலான கைகலப்பு ஏற்படுவதனையே காணமுடிகின்றது. ஆனால் இந்த காணொளியின் தலைப்பில் குறிப்பிட்ட வித்தில் வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை எம்மால் காணமுடியவில்லை.
அதில் அவர்கள் பேசிக்கொள்ளும் விடயங்களை கவனிக்குபோது அவர்கள் கதைக்கும் சில விடயங்கள் தெளிவாக கேட்கவில்லை, எனினும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தகாத வார்த்தைகளை பன்படுத்துவதனை கேட்கக் கூடியதாக இருந்தது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பதுளையில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் விரட்டி விரட்டி தாக்குதல் என பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அந்த சம்பவம் பதுளையில் இடம்பெறவில்லை என்பதுடன், அது ஹப்புத்தளையில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது சிலருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு என்பதுடன் அதனை அந்த இடத்திலேயே பொலிஸார் வந்து சமாதானப்படுத்தி பின்னர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டு, அந்த இடத்திலேயே அந்த பிரச்சினை நிறைவிற்கு வந்து விட்டதாகவும் ஹப்புத்தளை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



