அண்மையில், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையக்கூடாது என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரவத் தொடங்கின.
குறிப்பாக, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடம்பெற்றுள்ள புகைப்படத்தைப் பயன்படுத்தி, “கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது” என்ற தலைப்பில் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.
இந்தத் தகவலின் சட்டப் பின்னணி, இந்தியா–இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் வரலாறு மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பன தொடர்பில் நாம் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு ஆய்வு இதுவாகும்.
தகவலின்விவரம் (What is the claim):

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம்! – இந்திய அரசின் முக்கிய தகவல்
கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது! என தெரிவித்து இந்த தகவல் கடந்த 2026.10.07 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.


Facebook | Archived Link | Facebook | Archived Link
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவுகளில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2025 ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதன் மூலம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டின் விளைவாகவோ அல்லது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாகவோ இந்திய உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டிருந்தது.
எனினும், கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கே சொந்தமானது என இந்திய உச்ச நீதிமன்றம் புதிதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோன்று, இது தொடர்பில் புதிய சட்டரீதியான தீர்ப்பையும் வழங்கவில்லை.
மாறாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்து, இந்திய மீனவர்கள் அனுமதியின்றி இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்திடம் நீதிமன்றம் வாய்மொழியாக வலியுறுத்தியதே உண்மையில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் (2026 ஒக்டோபர் 6) இந்திய உச்ச நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது?
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளான அதிமுக (AIADMK) மற்றும் திமுகவின் (DMK) மீனவர் பிரிவு சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை இந்திய அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான தலைமைச் சட்ட அதிகாரி ஆர். வெங்கடரமணி, இலங்கையுடன் நிலவும் சுமுகமான இராஜதந்திர உறவுகளைக் கருத்திற்கொண்டு, கச்சத்தீவு தொடர்பான முந்தைய ஒப்பந்தங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நோக்கமோ தயார்நிலையோ இல்லை என்பதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தியக் கடற்பரப்பில் நிலவும் அதிகளவான மாசுபாடு மற்றும் கடலடித் தளத்தை இழுத்துச் செல்லும் மீன்பிடி முறையான ‘பொட்டம் ட்ரோலிங்’ (Bottom Trawling) பயன்பாடு காரணமாக இந்தியக் கடற்பரப்பில் மீன்வளம் குறைவடைந்துள்ளதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, இலங்கை தனது கடற்பரப்பைத் தூய்மையாகப் பேணுவதால், இலங்கையின் கடல் எல்லைக்குள் அதிகளவான மீன்கள் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கருத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
குறிப்பாக, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (International Maritime Boundary Line – IMBL) கடந்து செல்லக்கூடாது என்பது தொடர்பில் தமிழக மீனவர்களுக்கு உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான ஊடக செய்திகளை இங்கே பார்வையிடவும் Link | Link | Link | Link
இலங்கை கடற்றொழில் அமைச்சரின் கருத்து
இலங்கையின் கடற்றொழில், நீரியலவுளு மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆக்கபூர்வமான அவதானிப்பையும் உத்தரவையும் வரவேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைக்குச் சட்டரீதியான தீர்வைக் காண்பதற்கு முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கையின் கடல் சூழல் தொகுதி மற்றும் மீன்வளத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை பெரும் ஆதரவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எப்படி?
கச்சத்தீவு என்பது இலங்கையின் நெடுந்தீவிற்கு மேற்கிலும், இந்தியாவின் இராமேஸ்வரம் தீவிற்கு வடகிழக்கிலும், பாக்கு நீரிணையில் (Palk Strait) அமைந்துள்ள சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, மக்கள் வசிக்காத ஒரு தீவாகும்.
வரலாற்றுப் பின்னணியும் உரிமை தொடர்பான ஆரம்பகால நிலைமையும்
காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்பிருந்தே கச்சத்தீவின் உரிமை தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வரலாற்று ரீதியான ஆதாரங்களைக் கொண்டிருந்தன.
டச்சு மற்றும் பிரித்தானிய ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பழைய வரைபடங்கள் மற்றும் ஆவணங்களின்படி, கச்சத்தீவு பாரம்பரியமாக யாழ்ப்பாண இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இந்தியாவின் தமிழ்நாட்டுத் தரப்பினர், கச்சத்தீவு அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழ்நாடு) இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் (Raja of Ramnad) சொந்தமான ஜமீன்தாரி ஆட்சிமுறையின் கீழ் இருந்த நிலப்பகுதி என வாதிடுகின்றனர்.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், குறித்த தீவில் வரி வசூலிக்கும் உரிமை இராமநாதபுரம் மன்னருக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1921ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைகளை நிர்ணயிப்பதற்காக கொழும்பில் மாநாடொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, கச்சத்தீவு இலங்கையின் எல்லைக்குள் அமைந்துள்ளதாக இலங்கைத் தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலைப்பாட்டை இந்தியப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், இராமநாதபுரம் மன்னரின் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய–இலங்கை கடல் எல்லை ஒப்பந்தங்கள்
இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற பின்னர், கச்சத்தீவின் உரிமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மீன்பிடி எல்லைகள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
1974 ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட கடல் எல்லை ஒப்பந்தம்
அப்போதைய இலங்கைப் பிரதமரும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கிடையில் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 28ஆம் திகதிகளில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான முழுமையான ஆவணம், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் கடல் சட்டப் பிரிவினால் (United Nations Division for Ocean Affairs and the Law of the Sea) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
• கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டமை:
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாக்கு நீரிணையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டது.
அதன்படி, கச்சத்தீவு சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் (International Maritime Boundary Line – IMBL) இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளதாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது.
இதன் அடிப்படையில், கச்சத்தீவின் மீதான இறையாண்மை உரிமை சட்டரீதியாக இலங்கைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
• இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் (Vested Rights):
1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் 5ஆவது சரத்தின்படி, இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் கடவுச்சீட்டு அல்லது விசா இன்றி கச்சத்தீவிற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்கும், மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
1976 மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்ட மேலதிக ஒப்பந்தம்
1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட சில தெளிவற்ற விடயங்களுக்குத் தீர்வு காணும் வகையில், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி இரு நாடுகளினதும் வெளிவிவகாரச் செயலாளர்களால் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரத்தியேக பொருளாதார வலயங்கள் (Exclusive Economic Zones – EEZ) வரையறுக்கப்பட்டன.
• மீன்பிடி உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள்:
இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய கடிதப் பரிமாற்றங்களின்படி, ஒரு நாட்டின் மீனவர்களுக்கு மற்றைய நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, கச்சத்தீவைச் சுற்றியுள்ள இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சட்டரீதியான உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லாமல் போனது.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு வழிவகுத்த முக்கிய சட்ட மற்றும் இராஜதந்திரக் காரணிகள்
இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கம், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்குத் தீர்மானித்தமைக்குப் பல காரணங்கள் அடிப்படையாக அமைந்தன.
1. புவியியல் அமைவிடம் மற்றும் அருகாமை
கச்சத்தீவு, இந்தியாவின் பாம்பன் கடற்கரையிலிருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
2. இராஜதந்திர நட்புறவு
அப்போதைய இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் நிலவிய நெருக்கமான நட்புறவும், அணிசேராக் கொள்கையின் (Non-Aligned Movement) அடிப்படையிலான ஒத்துழைப்பும், இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதற்கான காரணிகளாக அமைந்தன.
3. புவிசார் அரசியல் மூலோபாயம்
இந்திய – சீன சகாப்தத்தை தொடர்ந்து உருவான பிராந்திய அரசியல் சூழலில், தெற்காசியாவில் உள்ள சிறிய அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து, பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவது இந்தியாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிரான தமிழகத்தின் நிலைப்பாடு
1974ஆம் ஆண்டு முதல், தமிழக அரசாங்கமும் அங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகளான திமுக (DMK) மற்றும் அதிமுக (AIADMK) ஆகியவையும் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன.
இந்திய அரசியலமைப்பின் 368ஆவது சரத்தின்படி, இந்தியாவின் நிலப்பரப்பை மற்றொரு நாட்டிற்கு வழங்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றும் தமிழகத் தரப்பினர் வாதிடுகின்றனர்.
ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டபோது இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், அந்த ஒப்பந்தம் செல்லுபடியற்றது என்பதே அவர்களின் முக்கிய வாதமாகும்.
இது தொடர்பாக தமிழகத் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இந்திய மத்திய அரசாங்கமும் அதன் வெளிவிவகார அமைச்சும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன.
மேலும், 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றமும், கச்சத்தீவு தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ள கடல் எல்லை ஏற்பாடுகளை மீண்டும் திறந்து பரிசீலிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தயாராக இல்லை என்பதை வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இலங்கை–இந்தியா இடையிலான கடல் எல்லை மற்றும் கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகள் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மீண்டும் மாற்றுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்பதும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிடப்படுவது போன்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டின் விளைவாகவோ அல்லது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாகவோ இந்திய உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.
தற்போதைய அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, தமிழக அரசியல் கட்சிகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போதைய நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கச்சத்தீவின் உரிமை தொடர்பான விவகாரம், 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு கடல் எல்லை ஒப்பந்தங்களுடன் தொடர்புடையதாகும். இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கருத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மதித்து, அதனைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையாமல் இருக்குமாறு இந்திய மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையிலேயே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
எனவே, இந்த நீதிமன்ற நடவடிக்கையை தற்போதைய அரசியல் தலைவர்களின் உடனடி அரசியல் தீர்மானத்தின் விளைவாகச் சித்தரித்துப் பகிரப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்தும் மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



